கட்டுமான பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

போடி, டிச.22: கட்டுமான பணியின்போது, 2ம் மாடியிலிருந்து தொழிலாளி தவறி விழுந்து பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பெரியஈஸ்வரன் (40). போடி ஜமீன் தோப்பை சேர்ந்தவர் ராமர். இருவரும் கட்டுமான தொழிலாளர்கள். நேற்று முன் தினம் காலை போடி போஜன் பார்க் அருகில் உள்ள நாகராஜ் என்பவரது வீட்டில் கட்டுமான பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தனர்.

பெரியஈஸ்வரன் 2ம் மாடிக்கு செங்கற்களை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். பணியின்போது, இரண்டாம் மாடியில் உள்ள பால்கனி வழியாக செங்கற்களை சுமந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக கால் இடறி 2ம் மாடியில் இருந்து அவர் தரையில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். புகாரின்பேரில் போடி நகர் காவல் நிலைய எஸ்ஐ குருகவுதம் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

 

Related Stories: