புதுச்சேரி, டிச. 22: புதுச்சேரி வில்லியனூர் வி.மணவெளி மயிலம் முருகன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(45). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். தினமும் காலையில் வீட்டை பூட்டி விட்டு கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.
அதுபோல், கடந்த 16ம் தேதி காலை கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் மற்றும் 2 பித்தளை குத்துவிளக்குகள் திருட்டு போயிருந்தது.
இது குறித்து சுப்பிரமணியன், வில்லியனூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
