சென்னையில் உரிமம் பெற்ற 2,700 துப்பாக்கிகளை போலீசில் உடனடியாக ஒப்படைக்க உத்தரவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் உரிமம் பெற்ற 2,700க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அதற்கான அறிவிப்பை வெளிட்டது. அதை தொடர்ந்து தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தது.

இதையடுத்து சென்னையில் காவல்துறை முன் அனுமதியோடு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், முக்கிய விஐபிக்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் என சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகர எல்லையில் 2,700க்கும் மேற்பட்டோர் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நாடாளுமன்ற தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்ததால், அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்களது துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்த உடன் அவரவர் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து துப்பாக்கி உரிமம் வைத்துள்ள தொழிலதிபர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று வரை 700க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள துப்பாக்கிகள் ஓரிரு நாளில் பெறப்படும் என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் உரிமம் பெற்ற 2,700 துப்பாக்கிகளை போலீசில் உடனடியாக ஒப்படைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: