எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு அஜித்பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ்: மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் தீர்ப்பு


மும்பை: தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விசாரித்த சபாநாயகர் ராகுல் நர்வேகர், அஜித்பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தீர்ப்பளித்தார். மேலும், அஜித்பவார் மற்றும் சரத்பவார் தரப்புகளில் தாக்கல் செய்யப்பட்ட தகுதி நீக்க மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மகாராஷ்டிராவில் கடந்த ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த அஜித்பவார், தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேருடன் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜ கூட்டணி அரசில் இணைந்தார். பின்னர் மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றார்.

இவருடன் வந்த 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களது மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம் அஜித்பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனவும், அவர்களுக்குத்தான் தேசியவாத காங்கிரஸ் பெயரும், கடிகாரம் சின்னமும் உரிமை உடையது எனவும் தீர்ப்பளித்தது. இந்நிலையில், அஜித்பவார் மற்றும் சரத்பவார் தரப்பில் பரஸ்பரம் தாக்கல் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகர் ராகுல் நர்வேகர் நேற்று தீர்ப்பளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அஜித்பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தீர்ப்பு வழங்கப்படுகிறது. மேலும், அஜித்பவார் மற்றும் சரத்பவார் தரப்புகளில் இருந்து பரஸ்பரம் எதிர்தரப்பு எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்படுகின்றன. அப்போதைய கட்சித் தலைவர் சரத் பவாரின் முடிவுகள் குறித்துக் கேள்வி எழுப்புவதோ அல்லது அவரது முடிவுகளை மீறுவதோ கட்சித் தாவல் என்று கருத முடியாது. அது கட்சிகள் நிலவும் அதிருப்தி என்று மட்டுமே கொள்ளப்பட வேண்டும். ஒரு கட்சித் தலைமை அரசியலமைப்பு சட்டம் 10வது பிரிவை பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான அதிருப்தி உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதாக அச்சுறுத்தி அவர்களை நசுக்கி விட முடியாது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட நிகழ்வுகள் உட்கட்சியில் இருந்து அதிருப்தியின் வெளிப்பாடாகவே இருந்தன. மேலும், அஜித் பவார் அணியினர் எடுத்த முடிவுகள் தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை. கட்சியில் இருந்து அஜித்பவார் அணி வெளியேறியபோது, அவரிடம் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, அஜித்பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என முடிவு செய்யப்படுகிறது. இவ்வாறு நர்வேகர் தீர்ப்பளித்தார்.

The post எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு அஜித்பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ்: மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: