கர்நாடக அரசை கவிழ்க்க கேரள கோயிலில் மிருக பலியா?: டி.கே.சிவகுமாருக்கு கேரள அமைச்சர்கள் கடும் கண்டனம்

திருவனந்தபுரம்: தன்னையும், கர்நாடக அரசையும் கவிழ்ப்பதற்கு கேரளாவில் உள்ள ஒரு கோயில் உட்பட சில இடங்களில் மிருக பலியும், மந்திரவாதமும், பில்லி சூனியமும் நடத்தப்பட்டதாக கூறிய கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் பேச்சுக்கு கேரள அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், பிந்து ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் நேற்று முன்தினம் பெங்களூருவில் நிருபர்களிடம், “தன்னையும், முதல்வர் சித்தராமையாவையும், கர்நாடக அரசையும் கவிழ்ப்பதற்கு கேரளாவிலுள்ள ஒரு கோயில் உள்பட ஒரு சில இடங்களில் வைத்து மிருக பலியும், மந்திரவாதம் மற்றும் பில்லிசூனியம் நடத்தப்பட்டது” என்றார்.
ராஜகண்டக, மரண மோகன ஸ்தம்பன யாகங்களும், எதிரிகளை அழிக்கும் சத்ரு சம்ஹார பூஜைகளும் நடத்தப்பட்டது என்றும், கர்நாடகத்திலுள்ள சிலரின் துணையுடன் கேரளாவில் நடைபெறும் மந்திரவாதம் குறித்து தெரிந்தவர்கள்தான் இதன் பின்னணியில் செயல்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். டி.கே. சிவகுமாரின் இந்தப் பேச்சு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்றும், தேவையின்றி பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே சிவகுமார் இவ்வாறு கூறுவதாகவும் கேரள மாநில பாஜ தலைவர் சுரேந்திரன் தெரிவித்தார். டி.கே. சிவகுமாரின் இந்தப் பேச்சுக்கு கேரள அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், மற்றும் பிந்து ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “டி.கே.சிவகுமார் தெரிவித்தது போன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடக்க வாய்ப்பே கிடையாது. எந்த ஆதாரமும் இல்லாமல் இதுபோன்ற தகவலை கூறுவது ஏற்கத்தக்கதல்ல. ஆனாலும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார். இதுபற்றி கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து, “இது கேரளா என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். டி.கே. சிவகுமார் கூறியது போன்ற சம்பவம் எந்தக் காலத்திலும் கேரளாவில் நடைபெறாது. அவரது கருத்து முட்டாள்தனமானது என்றே கூற வேண்டும். கல்வி அறிவு பெற்ற மாநிலமாக விளங்கும் கேரளாவில் இத்தகைய சம்பவங்கள் நடைபெற வாய்ப்பில்லை. கேரள மக்களும் அதை கடுமையாக எதிர்ப்பார்கள். கேரளாவின் அணுகுமுறை பகுத்தறிவு மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. நாட்டை பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக இதுபோன்ற விஷயங்கள் எல்லை தாண்டி கேரளாவுக்கு வருகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

 

The post கர்நாடக அரசை கவிழ்க்க கேரள கோயிலில் மிருக பலியா?: டி.கே.சிவகுமாருக்கு கேரள அமைச்சர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: