உச்ச நீதிமன்ற கொலிஜியம் விவரங்களை கேட்ட மனுதாரருக்கு ரூ.25000 அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: கொலிஜியம் அமைப்பின் முடிவுகள் குறித்தும், அதன் பின்னணி குறித்த விவரங்களையும் விரிவாக வௌியிட கோரி வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உச்ச நீதிமன்ற கொலிஜியம் அமைப்பானது, உச்ச நீதிமன்றம் மற்றும் நாடு முழுவதுமுள்ள உயர் நீதிமன்றங்களின்தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளை பரிந்துரைக்கும் அமைப்பாகும். இந்த கொலிஜியம் அமைப்பின் முடிவுகள் குறித்தும், அதன் பின்னணி குறித்த விவரங்களையும் விரிவாக வெளியிட வேண்டும் எனக் கோரி ராகேஷ் குமார் குப்தா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கு விளம்பர நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாக புரிந்துக் கொள்ள முடிகின்றது. ஏற்கனவே இதுபோன்ற நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வழக்குகளை தொடர்ந்ததற்காக மனுதாரருக்கு எதிராக சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது தொடர்ந்துள்ள இந்த மனுவை ரூ.25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்வதாகவும், இந்த அபராத தொகையை காயமடைந்த பாதுகாப்பு படையினருக்கான நல திட்டத்திற்கான வங்கி கணக்கில் நான்கு வார காலத்துக்குள் மனுதாரர் செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

 

The post உச்ச நீதிமன்ற கொலிஜியம் விவரங்களை கேட்ட மனுதாரருக்கு ரூ.25000 அபராதம்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: