தேஜ கூட்டணியில் உள்ள கட்சிகள் வரதயாராக உள்ளன இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும்: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி


புதுடெல்லி: மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும் தேஜ கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்தியா கூட்டணியில் சேருவதற்கு வரிசையில் நிற்கின்றன என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2 கட்ட தேர்தலுக்கு பின்னர் மக்களின் தெளிவான, உறுதியான ஆதரவை தேர்தலில் பெறுவோம் என்ற நம்பிக்கை காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறினேன். கடந்த 2019 தேர்தலில் ராஜஸ்தான்,கர்நாடகா,மகாராஷ்டிரா,பீகார்,உபி மாநிலங்களில் காங்கிரசுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.ஆனால் இந்த தேர்தலில் ராஜஸ்தான், உபி,மகாராஷ்டிரா, அரியானா, பஞ்சாப் , பீகாரில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் அதிக இடங்களை வெல்லும். டெல்லியில் இருந்தபடி நான் இதை சொல்லவில்லை. கட்சியின் தலைவர்கள் கார்கே,ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி ஆகியோர் இந்த மாநிலங்களுக்கு சென்று தீவிர பிரசாரம் செய்தனர். அப்போது அவர்கள் இதை தெரிவித்தனர். மேற்கண்ட மாநிலங்களில் 2019ல் உள்ள நிலைமை இப்போது இல்லை. எனவே, இந்தியா கூட்டணி மிக பெரிய வெற்றியை பெறும். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும். காங்கிரசுக்கு தன்னம்பிக்கை ஏற்படுவதற்கான காரணம் மோடி. தேர்தல் பிரசாரத்தில் மோடி நிலைகுலைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

வழக்கமாக தேர்தலில் காங்கிரஸ் மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறி பிரச்னைகளை திசை திருப்புவார். ஆனால், இப்போது,காங்கிரசின் தேர்தல் அறிக்கை, ராகுல் காந்தி மற்றும் கார்கேயின் பேச்சுகள் தொடர்பாக ஏராளமான பொய் மூட்டைகளை அவர் அவிழ்த்து விட்டார். இதன் மூலம் அவர் தடுமாற்றம் அடைந்து விட்டார் என தெரிந்தது. தன்னம்பிக்கையோடு பேசும் மோடியின் பேச்சுக்கள் இந்த தேர்தலில் காணப்படவில்லை. கடந்த தேர்தலில் புல்வாமா போன்ற உணர்ச்சிபூர்வமான பிரச்னைகள் இருந்தன. ஆனால் இப்போது அலை எதுவும் வீசவில்லை.விவசாயிகள், இளைஞர்கள் எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாக்களித்தனர். இட ஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டம் போன்ற விஷயங்கள் எழுப்பப்பட்டது எதிர்க்கட்சிகளுக்கு மிகுந்த பயன் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வரும் 4ம் தேதி மீண்டும் அணி மாறுவாரா? என்று கேட்டதற்கு,‘‘நிதிஷ்குமார் என்ன செய்வார் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால்,தேஜ கூட்டணியை சேர்ந்த பல கட்சிகள் இந்தியா கூட்டணியில் சேர வரிசையில் நிற்கின்றன’’ என்றார்.

 

The post தேஜ கூட்டணியில் உள்ள கட்சிகள் வரதயாராக உள்ளன இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும்: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: