சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி

புதுடெல்லி: சிகாகோ சர்வ சமய மாநாட்டின் இறுதி நாளில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் பற்றி பிரதமர் மோடிக்கு தெரியுமா என மார்க்சிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கேட்டுள்ளார். பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேர தியானம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்,சிகாகோவில் நடந்த சர்வ சமய மாநாட்டின் இறுதி நாளில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா என்று கேட்டுள்ள மார்க்சிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி,விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகளை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விவேகானந்தர் பேசுகையில், மாநாட்டில் சமய ஒருமைப் பாட்டிற்குரிய பொது நிலைக்களம் பற்றி அதிகம் பேசப்பட்டது. இந்த ஒருமைப்பாடு ஏதாவது ஒருமதத்தின் வெற்றியாலும், மற்ற மதங்களின் அழிவாலும் கிட்டும் என்று இங்குள்ள யாரேனும் நம்பினால், அவரிடம் நான், ‘சகோதரா! உனது நம்பிக்கை வீண்’ என்று சொல்லிக் கொள்கிறேன்.

சர்வசமயப்பேரவை உலகத்திற்கு எதையாவது எடுத்துக்காட்டியுள்ளது என்றால் அது இதுதான்: புனிதம், தூய்மை, கருணை இவை உலகின் எந்த ஒரு பிரிவுடையதின் தனிச் சொத்து அல்ல என்பதையும், மிகச்சிறந்த ஒவ்வொரு சமயப்பிரிவும் பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் தோற்றுவித்து இருக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளது. இந்த சாட்சியங்களுக்கு முன்பு, தம் மதம் மட்டும் தான் தனித்து வாழும், மற்ற மதங்கள்அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால் அவர்களைக் குறித்து நான் என் இதய ஆழத்திலிருந்து பச்சாதாபப்படுவதுடன், இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும்,‘உதவி செய், சண்டை போடாதே’, ‘ஒன்றுபடுத்து, அழிக்காதே’, ‘சமரசமும் சாந்தமும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்’ என்று எழுதப்படும் என்று அவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று பேசியுள்ளார்.

ModilinesVivekanandasspeech-finalday-Chicagoconference-SitaramYechuryquestions

The post சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: