பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல் : நீதிமன்றம் அனுமதி

பெங்களூரு: பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை எஸ்.ஐ.டி கைது செய்த நிலையில், அவரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. இதே ஹாசன் தொகுதியில் பாஜ – மஜத கூட்டணி சார்பில் மக்களவை தேர்தலில் அவர் தான் மீண்டும் வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். ஹாசன் தொகுதிக்கு தேர்தல் நடந்த ஏப்ரல் 26ம் தேதிக்கு சில தினங்களுக்கு முன், பிரஜ்வல் பல பெண்களை பலாத்காரம் செய்த வீடியோக்கள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) அமைக்கப்பட்டது. ஏப்ரல் 27ம் தேதியே டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வலை கைது செய்ய எஸ்.ஐ.டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பிரஜ்வலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ், பிடிவாரண்ட், ப்ளூ கார்னர் நோட்டீஸ் ஆகியவை விடுவிக்கப்பட்டது. பிரஜ்வலின் டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா, எஸ்.ஐ.டி கொடுத்த அழுத்தத்தின் பேரில், வெளியுறவு அமைச்சகம் பிரஜ்வலுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், பிரஜ்வல் பெங்களூருவிற்கு வந்து எஸ்.ஐ.டி விசாரணைக்கு ஆஜராவதாக தெரிவித்தார்.

அதனடிப்படையில், கடந்த 30ம் தேதி மாலை ஜெர்மனியின் முனிச் நகரிலிருந்து விமானத்தின் மூலம் நள்ளிரவு 12.40 மணிக்கு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை வந்திறந்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து எஸ்.ஐ.டி-யிடம் ஒப்படைத்தனர். பின்னர் விமான நிலையத்திலிருந்து சிஐடி அலுவலகத்திற்கு அழைத்து விசாரித்த எஸ்.ஐ.டி அதிகாரிகள், பெங்களூரு அரசு போரிங் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து பிரஜ்வல் ரேவண்ணா 42வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். எஸ்.ஐ.டி தரப்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் அசோக் நாயர், பிரஜ்வலை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட 42வது ஏசிஎம்எம் நீதிமன்ற நீதிபதி கே.என்.சிவகுமார், பிரஜ்வலை ஜூன் 6ம் தேதி வரை 6 நாட்கள் எஸ்.ஐ.டி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டது.
ஆண்மை பரிசோதனை: பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவிடம் சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பிறகு, பெங்களூரு அரசு போரிங் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு ஆண்மை பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

 

The post பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல் : நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: