பீகாரின் முங்கரில் மறுதேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

புதுடெல்லி: பீகார் மாநிலத்தின் முங்கர் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவின்போது பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வெளி நபர்களால் அதிரடியாக கைப்பற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முங்கர் மக்களவை தொகுதியின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் வேட்பாளர் அனிதா தேவி உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்ட முங்கர் தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

மேற்கண்ட மனு உச்ச நீதிமன்ற கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் பிரசன்ன பாலச்சந்திர வராலே ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் ஏன் முதலாவதாக உயர் நீதிமன்றத்தை அணுகாமல், நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடினார் என்பது கேள்வியாக உள்ளது. மேலும் இந்த மனுவை விடுமுறைக்கால சிறப்பு அமர்வு விசாரிக்க முகாந்திரம் இல்லை. அதேபோன்று தேர்தல் ஆணையத்துக்கும் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

 

The post பீகாரின் முங்கரில் மறுதேர்தல் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: