அண்ணாமலைக்கு வைக்கப்பட்ட பேனர் சரிந்து டிரைவர் காயம்

சோமனூர்: அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட பேனர் சரிந்து ஆட்டோ டிரைவர் காயமடைந்தார். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நால்ரோட்டில் நேற்று மாலை தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள இருந்தார். இதற்காக விதிமுறை மீறி பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அண்ணாமலைக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் அவருடைய நிகழ்ச்சிகள் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கருமத்தம்பட்டி நால்ரோட்டில் விதிமுறை மீறி வைக்கப்பட்டிருந்த 30 அடி உயர ராட்சத பிளக்ஸ் பேனர் கட்டப்பட்டிருந்த சாரம் அடியோடு சரிந்து சாலையில் விழுந்தது.

அப்போது அருகில் நின்ற ஆட்டோ மீது விழுந்ததால் அந்த ஆட்டோ சேதமானது. ஆட்டோ டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். மேலும் அந்த வழியாக சென்ற கேபிள் டிவி ஓயர், மின் கம்பிகளிலும் பேனர் விழுந்ததால் மின்கம்பிகள் சாலையில் அறுந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அந்த வழியாகச் சென்ற வாகனங்களும், பாதசாரிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பேனர் கீழே விழுந்ததை பாஜவினர் அவசர அவசரமாக அப்புறப்படுத்தி எடுத்து சென்றனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அண்ணாமலைக்கு வைக்கப்பட்ட பேனர் சரிந்து டிரைவர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: