இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க குன்னூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடியில் 4.0 தொழில்நுட்ப மையம்

*தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்

ஊட்டி : இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், குன்னூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடி மதிப்பில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க, இன்றைய தினம் குன்னூர் அரசினர் தொழிற் பயிற்சி மையத்தில், டாடா டெக்னாலிஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.34.65 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்ற நோக்கத்திலும், உலக அளவில் மாறி வரும் தொழில் நுட்பங்களுக்கேற்ப புதிதாக உருவாகும் வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலும் டாடா நிறுவனத்தின் சமூக பங்களிப்புடன் ரூ.2,877.43 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், 12.05 சதவீதம் ரூ.359.62 கோடி மாநில அரசின் பங்களிப்புடன், ஒவ்வொரு தொழிற்பயிற்சி நிலையத்தின் கட்டுமான பணிக்கு ரூ.3.73 கோடி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 102 தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய உலக தரம் வாய்ந்த 4.0 தரத்திற்கு உயர்ந்த 71 தொழிற் பயிற்சி நிலையங்களில் ஒன்று தான் இந்த குன்னூர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகும்.

இந்த கல்வி ஆண்டில் குன்னூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 88 மாணவர்கள் அதாவது, 90 சதவீதம் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 7,572 மாணவர்களில் 84.05 சதவீதம் 6,364 மாணவர்கள் இதுவரை சேர்ந்துள்ளனர். கடந்த 2022ம் கல்வியாண்டில் 92.68 சதவீதம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நடப்பாண்டில் 84 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை எட்டியுள்ளது. 100 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் இதுபோன்ற ஒரு சிறந்த திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம், வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் கற்கின்ற சிஎன்சி தொழில் நுட்பவியலாளர்கள், தொழிற்துறை ரொபோடிக்ஸ் போன்ற நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கல்வியை தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை குன்னூர் தொழிற்பயிற்சி பயின்ற 83 சதவீதம் மாணவர்கள் பல்வேறு இடங்களில் பணியில் சேர்ந்துள்ளனர். உயர்கல்வி முடித்தவர்கள் கூட வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு மட்டும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இல்லாத பகுதிகளில் 11 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.95.06 கோடி மதிப்பில் துவங்கப்பட்டுள்ளது, வரலாற்றிலேயே முதன் முறையாக நடந்த சாதனை ஆகும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மற்றுமொரு வரலாற்று சாதனையாகும், இந்த சீரிய முயற்சி தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன்மையானது எனவும், இப்பயிற்சியை பெறும் மாணவர்கள் பயிற்சிக்கு பின்னர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் விடா முயற்சியுடன், என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கோடு படிக்க வேண்டும். முயன்றால் முடியாதது ஏதுமில்லை. மேலும், மாணவர்கள் தங்கள் சக நண்பர்களும், தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயன் பெறும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பேசினார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கி தரவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பல முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் வண்ணம் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்குவதற்கு பல்வேறு யுக்திகளையும், நவீன இயந்திரங்களையும் பயன்படுத்தினாலும் திறன் பெற்ற தொழிலாளர்களின் தேவை இன்றைய காலத்தில் மிக அவசியமாகிறது.

உலகளாவிய வர்த்தகம் வந்த பிறகு வெளிநாட்டிலிருந்து தொழில் நுட்பங்களும் இயந்திரங்கள், தளவாடங்கள், மென்பொருட்கள் ஆகியவை இங்கு வந்துவிட்டாலும் கூட, இந்திய தொழில் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டியுள்ளது. இதற்கு நவீன தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் அவசியம் தேவைப்படுகிறார்கள். தொழில் நிறுவனங்கள் குறைந்த செலவில் தரமான பொருட்களை பெருமளவில் உற்பத்தி செய்வதற்கு இத்தகைய திறன் பெற்ற தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு, அரசு கடந்த ஆண்டில் மட்டும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இல்லாத பகுதிகளில் 11 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ.95.06 கோடி செலவில் துவங்கியுள்ளது என்பது இத்துறையின் வரலாற்றிலேயே முதன்முறையாக நடந்த சாதனையாகும்.

தமிழ்நாட்டில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் தற்போது இயங்கி வருகின்றன. இதில் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் கூடலூர் பகுதியில் 2 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இந்த குன்னூர் தொழிற்பயிற்சி நிலையமானது சுமார் 21.01 ஏக்கர் நிலப்பரப்பில் 1962-ம் ஆண்டு 7 தொழிற் பிரிவுகளுடனும், 1994-ம் ஆண்டு 2 தொழிற்பிரிவுகளுடனும், 2008-ம் ஆண்டு பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டத்தின் கீழ் 1 தொழிற் பிரிவும் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தினை முதல் மாநிலமாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்திலும், அனைவரும் கல்வி கற்க வேண்டும், உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்திலும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்ற நோக்கத்தில் நான் முதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அதனப்படையில் தமிழ்நாட்டில் 241 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 4,09,651 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நமது மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி, கூடலூரில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 2,063 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று திறந்து வைக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலைய தொழில் மையத்தில் மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயிற்சி பெற்று பயன் பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் ராமச்சந்திரன் பேசினார்.

தொழிற்பயிற்சி மாணவர்கள் விடுதியை நேரில் பார்வையிட்டு, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ள நகராட்சி ஆணையாளரிடம் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம் மற்றும் கட்டுமானம்) அய்யாசாமி, மண்டல பயிற்சி இணை இயக்குநர் கோவை முஸ்தபா, துணை இயக்குநர் (திட்டம்) பீர்முகம்மது, மாவட்ட வேலை வாய்ப்புத்துறை அலுவலர் சாகுல் ஹமீது, குன்னூர் நகர்மன்ற தலைவர் ஷீலா கேத்தரின், குன்னூர் நகர்மன்ற துணைத்தலைவர் வாசிம் ராஜா, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஜஸ்டின் ஜெபராஜ், குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம், குன்னூர் நகர்மன்ற உறுப்பினர் கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க குன்னூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடியில் 4.0 தொழில்நுட்ப மையம் appeared first on Dinakaran.

Related Stories: