சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் மனுதாக்கல்

 

ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் வழக்குகளை நேற்று விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது வழக்கறிஞர் மாரீஸ்குமார் ஆஜராகி, மாணவி கொலை தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றார். இதற்கு நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் ஆஜராகி, ‘‘இந்த வழக்கின் விசாரணைக்கு பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தேவையான மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் அளித்து விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்க வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘சிசிடிவி வீடியோ, டிஎன்ஏ அறிக்கை உள்ளிட்டவற்றை திங்கள் கிழமை தாக்கல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். காவல்துறையினர் இதுபோன்ற புகார்களை மெத்தனமாக கையாள்வது ஏற்கத்தக்கதல்ல. ஒரு குற்ற வழக்கில் காவல்துறைக்கு அதிக அழுத்தம் கொடுப்பதால் தவறான குற்றவாளிகளை சேர்க்க வாய்ப்பு உள்ளது. எனவே, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இந்த வழக்கை போலீசார் கையாள வேண்டும். குறிப்பாக உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்’’ எனக் கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: