10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்களை ஆர்டிஐ மூலம் பெறலாம்: மாநில தகவல் ஆணையம் உத்தரவு

 

சென்னை: ஆர்.பிரியதர்ஷினி என்ற மாணவி, கடந்த 2023ம் ஆண்டு, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் 28.5.2023 தேதியிட்டு தகவல் பெறும் உரிமை சட்டம் 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் தேர்வு எழுதிய தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் கணக்கு பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை கட்டண விதிகளின்படியும், தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் படியும் வழங்கிட கேட்டு, அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பொதுத் தகவல் அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளார்.

அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்ட 8.5.2023 நாளிட்ட செய்தி அறிவிக்கையின்படி 9.5.2023 முதல் 13.5.2023 வரை விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பதற்கு 5 நாட்கள் மட்டும் கால அவகாசம் வழங்கப்பட்டது. மனுதாரர் அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு, இயற்பியல் பாடத்திற்கு மட்டுமே விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்துள்ளார். மற்ற பாடங்களான தமிழ், ஆங்கிலம், வேதியியல், விலங்கியல் மற்றும் கணிதம் ஆகியவற்றிற்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கவில்லை என்பதால் இயற்பியல் தவிர்த்து ஏனைய பாடங்களுக்கு விடைத்தாள் நகல் வழங்க வழிவகை எதும் இல்லை என்ற விவரத்தை தகவலாக மனுதாரருக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த மாணவி மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி, நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளின்படி தகவல் பெறும் உரிமை சட்டம் பிரிவு 6(1)ன் கீழ் திருத்தப்பட்ட விடைத்தாள்கள் ‘தகவல்’ என்ற வரையறைக்குள் வருவதால் பிரிவு 6(1)ன் கீழ் மனுதாரர் தகவல் பெற தகுதியுடையவர் ஆகிறார். மனுதாரர் தன்னுடைய விடைத்தாள் நகல்களை 2 வழிமுறைகளை பின்பற்றி பெற்றுக்கொள்ளலாம். அதன்படி, அரசு தேர்வு இயக்ககத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தியோ அல்லது தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை கட்டண விதிகளின்படி, பக்கத்திற்கு ரூ.2 வீதம் கட்டணம் செலுத்தியோ பெற்றுக்கொள்ளலாம்.

தகவல் பெறும் உரிமை சட்டம் 2005-ன் மாண்பை நிலைநிறுத்தும் வகையில் இனி வருங்காலங்களில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களின் நகலினை, அரசு தேர்வுகள் இயக்ககம், எவ்வளவு மாதங்கள் திருத்தப்பட்ட விடைத்தாளை பராமரிக்கிறார்களோ அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பக்கத்திற்கு ரூ.2 வீதம் செலுத்தி நகல்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரத்தை அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மாணவர்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிட வேண்டும்.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாணவர்களின் விடைத்தாள்களை மின்னணு வடிவத்தில் மாற்றம் செய்து பாதுகாத்திடவும், அரசாணை (நிலை) எண் 6, பள்ளி கல்வி துறை, நாள் 10.1.2019ன்படி பாதுகாக்கப்பட வேண்டிய திருத்தப்பட்ட விடைத்தாள்களின் காலக்கெடுவினை 3 மாத காலமாக குறைக்கப்பட்டைதை மீண்டும் 6 மாத காலமாக மாற்றியமைத்திட அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு பரிந்துரை செய்து உத்தரவிடுகிறது.

மேலும், மாணவர்களுக்கு தாங்கள் பெற்ற மதிப்பெண் குறித்த சந்தேகங்களை தீர்க்கவும், உரிய தீர்வை பெறவும், மாணவர்களின் ஐயப்பாட்டை நீக்கி உரிய கால அவகாசத்திற்குள் மதிப்பெண் பட்டியலைப் பெற்று, உயர் கல்வி பயில ஏதுவாக மாணவர்கள் கோரும் தகவல்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டவுடன், மாநிலம் முழுவதும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் விடைத்தாள்களை வழங்கக் கோரி விண்ணப்பிக்கும்போது 30 நாட்களில் தகவல் தர வேண்டும் என்ற பொதுவான கால அவகாசத்தை மட்டும் கருத்தில் கொண்டு இயந்திரத்தனமாக செயல்படாமல், எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களின் நலனைக் கருத்தில் கொண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 7(1)ல் குறிப்பிட்டுள்ளவாறு எவ்வளவு விரைவாக தகவல்களை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவாக தகவல்களை வழங்க அரசுத் தேர்வுகள் இயக்கக பொது அதிகார அமைப்பிற்கு ஆணையம் உத்தரவிடுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

* பக்கத்திற்கு ரூ.2 கட்டணம்:

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க அனைத்துப் பாடங்களுக்கும் தலா ரூ.275 கட்டணமாக கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், விடைத்தாள் நகலைத் தகவல் அறியும் உரிமைச்சட்டதின் மூலம் பெறலாம் என உத்திரவிடப்பட்டுள்ளதால், பக்கத்திற்கு ரூ.2 மட்டும் செலுத்திப் பெற முடியும்.

* 3 மாத அவகாசம்:

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பதற்கு 5 நாட்கள் மட்டும் கால அவகாசம் வழங்கப்பட்டு வந்து நிலையில், திருத்தப்பட்ட விடைத்தாள்களின் நகலினை அரசு தேர்வுகள் இயக்ககம் எவ்வளவு மாதங்கள் திருத்தப்பட்ட விடைத்தாளை பராமரிக்கிறார்களோ அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் நகல்களை பெறலாம் என்ற மாநிலத் தகவல் ஆணையத்தின் உத்தரவின் மூலம் 3 மாதம் வரை கால அவகாசம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: