மானாமதுரை வாலிபர் ஆகாஷ் மரண வழக்கு இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் சஸ்பெண்ட்: ஐகோர்ட் கிளையில் தீர்ப்பு ஒத்திவைப்பு

 

மதுரை: மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட் மதுரை கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இதனிடையே, மானாமதுரை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 6 போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த வாலிபர் ஆகாஷ் டெலிசன் கடந்த 7ம் தேதி மானாமதுரை போலீசார் நடத்திய விசாரணையின்போது உயிரிழந்தார். இதுகுறித்து ஆகாஷ் ெடலிசனின் தந்தை ராஜேஷ்கண்ணன், ஐகோர்ட் கிளையில் தொடர்ந்த வழக்கில், உடனடியாக உடற்கூராய்வு செய்யவும், அதன் அறிக்கை மற்றும் வீடியோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகாஷின் பெற்றோரிடம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தீண்டாமை வன்ெகாடுமை பிரிவு சேர்க்கப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டது. ஆனாலும் ஆகாஷின் உடலை வாங்க மறுத்து ெதாடர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் நீதிபதி கைது செய்ய உத்தரவிட்டதையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் ஆஜராகி, ‘‘ஆகாஷின் பெற்றோர் உடலை இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை’’ என்றார். மனுதாரர் தரப்பில், ‘‘தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவின் மீது உரிய தீர்ப்பளிப்பதாகக் கூறி தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

இதனிடையே மானாமதுரை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) திலீபன், எஸ்ஐ குகன், காவலர்கள் தெய்வேந்திரன், சரத்குமார், மனோகரன், காளீஸ்வரன் ஆகிய 6 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து சிவகங்கை எஸ்பி சிவபிரசாத் நேற்று மாலை உத்தரவிட்டுள்ளார்.

* 28 இடத்தில் காயங்கள்

ஆகாஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வௌியாகியுள்ளது. அதில், ‘‘வலது காலின் நடுப்பகுதியில் உள்ள எலும்புகள் முறிந்துள்ளன. அந்த பகுதியில் தசை மற்றும் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் சேதம் அடைந்து 45 செமீ மற்றும் 12 செமீ அளவில் ரத்தம் உறைந்த நிலையில் காயம் உள்ளது. முழங்கை, வலது முழங்கால் மற்றும் தொடை பகுதி உள்ளிட்ட பல இடங்களில் சிவப்பு நிற சிராய்ப்புகள் மற்றும் கீறல்கள் இருந்தது. மூளையின் முன் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் புள்ளி வடிவில் ரத்த கசிவு உள்ளது. நுரையீரல், இதயப்பகுதியில் ரத்தம் உறைந்துள்ளது. இவ்வாறு ஆகாஷின் உடலில் 28 இடங்களில் காயங்கள் உள்ளன’’ என கூறப்பட்டுள்ளது. ரசாயன பகுப்பாய்வு மற்றும் திசு பரிசோதனை பகுப்பாய்வுகள் கிடைத்த பிறகே இறுதி அறிக்கை கிடைக்கும். கல்லீரல், சிறுநீரகம் மற்றும் ரத்த மாதிரிகளின் தடயவியல் ஆய்வு முடிவும் வரவேண்டியுள்ளது. இவை அனைத்தும் வந்தபிறகே முழுமையான விபரம் தெரியவரும்.

* ரூ.6 லட்சம் நிதி உதவி

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்ட கலெக்டர் பொற்கொடி ஆகியோர் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள ஆகாஷின் வீட்டிற்கு நேற்று சென்று, ஆகாஷின் பெற்றோர் ராஜேஷ்கண்ணன் – ஆனந்தி ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் எஸ்சி-எஸ்டி ஆணையம் மூலம் வழங்கப்படும் நிதியின் கீழ் முதற்கட்டமாக ரூ.6 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள். அப்போது மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் உடனிருந்தனர்.

ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் கூறுகையில், ‘‘எனது மகனின் இறப்புக்கு காரணமான 16 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினேன். சம்பந்தப்பட்ட காவல் துறையினரின் பெயர்களை நீதிமன்றத்திலும் வழங்கியுள்ளேன். கொலை செய்த போலீசாரை கைது செய்யும் வரை எனது மகனின் உடலை வாங்க மாட்டேன்’’ என்றார்.

* தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

ஆகாஷ் மரண வழக்கில், நிர்வாக நடவடிக்கையாக சிவகங்கை மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். நேற்று இவர் தனிப்பிரிவில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு சாக்கோட்டை இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக காரைக்குடியில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். சாக்கோட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் காரைக்குடி இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்தரவுகளை ராமநாதபுரம் சரக டிஐஜி மணிவண்ணன் பிறப்பித்தார்.

Related Stories: