பெரம்பூர்: ஓட்டேரி வேம்புலி அம்மன் கோயிலில் ரூ.1.35 கோடி மதிப்பிலான திருப்பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார். இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்து வருகிறது. மேலும், கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி வாழைமாநகர் பகுதியில் பழமையான வேம்புலி அம்மன் கோயிலை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனர்.
அதன்படி, ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் திருப்பணி தொடக்க விழா நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, திருவிக நகர் தொகுதி எம்எல்ஏ தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் அம்பாள், முருகன், விநாயகர், நவகிரகம், நாகர் சன்னதிகள், அர்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் பிரகார மண்டபம் ஆகிய இடங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
திருப்பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்த பிறகு கும்பாபிஷேகம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மண்டல இணை ஆணையர் முல்லை. உதவி ஆணையர் புவனேஸ்வரி, திருக்கோயில் தக்கார் ஆட்சி சிவப்பிரகாசம். மேலாளர் தனசேகர் மற்றும் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் வடசென்னை மாவட்டம் சார்பில் நேற்று ஓட்டேரி அம்பேத்கர் திருமண மாளிகையில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. வடசென்னை மாவட்டத்தை சேர்ந்த 300 கர்ப்பிணிகள் இதில் கலந்துகொண்டனர். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
