நியோமேக்ஸ் நிறுவன சொத்து விற்பனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து

 

மதுரை: நியோமேக்ஸ் நிறுவன சொத்துகள் விற்பனை குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தகவல் சென்றடையும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி பல்லாயிரம் கோடி வரை மோசடி நடந்தது. இது தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர்.

மோசடி தொடர்பாக நிதி நிறுவன இயக்குநர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர். ஜாமீனில் வெளிவந்த இவர்கள் நீதிமன்ற உத்தரவுகளை மீறி முதலீட்டாளர்களை மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி பல மனுக்கள் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி தொடர்ந்து விசாரித்து வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை பொது ஏலம் விடவும், அதற்கான ஆன்லைன் பதிவு முகவரி உள்ளிட்ட விபரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி, ‘‘நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.7 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து கள் 4 வகைகளாக பிரித்து விற்பனைக்கு தயாராக உள்ளது.

முதலில் அரசு அனுமதி பெற்ற நிலங்கள், இரண்டாவது அரசு அனுமதிக்காக விண்ணப்பிக்க பட்ட நிலங்கள், மூன்றாவது அனுமதி பெறாமல் வாங்கி வைக்கப்பட்டுள்ள நிலங்கள், 4வது அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் என நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. நிலங்களை வாங்குவதற்கு ஆன்லைன் பதிவு கட்டணமாக ஆயிரம் ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது. மற்றபடி எந்த கட்டணமும் கிடையாது’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘கடந்த ஒரு வாரத்தில் எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், தனிநபர்கள் எத்தனை?’’ என்றார். இதற்கு, ‘‘பாதிக்கப்பட்டோர் 60 நபர்கள் மட்டுமே இதுவரை விண்ணப்பித்துள்ளனர். தனிநபர்கள் 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்’’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘‘இந்த திட்டம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவு எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எதையும் கடைசி நேரத்தில் எதிர்கொள்ளலாம் என உள்ளனர். இது தவறான முன்னுதாரணம். இதுவரை 60 பேர் மட்டுமே பதிவு செய்திருப்பது வருத்தம் அளிக்கிறது.

எனவே, நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள், அரசின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சென்றடைந்ததா என்று தெரியவில்லை. குற்றப்பிரிவு போலீசார் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்தார்களா என்பதும் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தகவல் சென்றடையும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related Stories: