சென்னை: காஸ் சிலிண்டர் விலை உயர்வு, தட்டுபாட்டை கண்டித்து எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட காங்கிரசார் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றிய பாஜ அரசின் தவறான வெளியுறவு கொள்கையின் காரணமாக பெட்ரோல், டீசல் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வோடு, பற்றாக் குறையும் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் சார்பில் எழும்பூர் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
போராட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். சென்னை மாவட்ட தலைவர்கள் கராத்தே செல்வம், விஜய சேகர், டில்லி பாபு, எம்எம்டிஏ.கோபி, ஜோதி பொன்னம்பலம், மதரம்மா கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபி மனோகரன், அசன் ஆரூண், துரை சந்திரசேகர், மாநில துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் ராம்மோகன், சென்னை மாநகராட்சி குழு தலைவர் எம்.எஸ்.திரவியம், எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் தாம்பரம் நாராயணன், ஆர்டிஐ பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி, மாநில செயலாளர் எஸ்.ஏ.வாசு, அகரம் கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எழும்பூர் ரமடா ஓட்டல் அருகில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்தை நோக்கி பேரணியாக சென்னை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் ஆல்பர்ட் தியேட்டர் அருகே தடுத்த நிறுத்தினர். இந்த பேரணியில் பெண்கள் விறகு அடுப்புகளை தலையில் சுமந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதோடு சமையல் காஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி இறந்தவர்களை கொண்டு செல்லும் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஏற்றி பெண்கள் ஒப்பாரி வைத்து சங்கு ஊதி ஊர்வலமாக ெகாண்டு சென்று பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் காஸ் சிலிண்டரை தலையில் சுமந்தபடி சென்று ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
