ஊட்டி: ஊட்டியில் ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை கொடுத்ததால் போலீஸ்காரரை கல்லூரி மாணவி செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவர், கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். வீட்டிற்கு வந்திருந்த மாணவி கல்லூரியில் நடைபெற்று வரும் செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காக கூடலூரில் இருந்து பாலக்காடு செல்லும் அரசு பஸ்சில் கோவைக்கு ஏறினார். பஸ்சில் 3 பேர் அமரும் இருக்கையில் மாணவி அமர்ந்தார்.
அப்போது, கோவையில் போலீஸ்காரராக பணியாற்றும் ஒருவர் அதே பஸ்சில் பயணித்துள்ளார். அவர் கல்லூரி மாணவி அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்தார். தொடர்ந்து மேலும் ஒருவர் அதே இருக்கையில் அமர்ந்ததால் கல்லூரி மாணவி அருகே போலீஸ்காரர் இருக்க நேரிட்டது. வழியில் போலீஸ்காரர் அந்த மாணவி மீது சாய்ந்துள்ளார்.
ஒருவேளை தூக்கத்தில் தெரியாமல் மேலே சாய்ந்திருக்கலாம் என்று கருதி அந்த மாணவி அமைதியாக இருந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த போலீஸ்காரர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவி என்ன செய்வது என்று தெரியாமல், அமைதியாக இருந்துள்ளார். ஆனால், போலீஸ்காரரின் தொல்லை எல்லை மீறியதால், ஊட்டி பஸ் நிலையம் வந்ததும் ஆவேசமடைந்த கல்லூரி மாணவி செருப்பை கழற்றி போலீஸ்காரரை வெளுத்து வாங்கினார்.
இதனால், பொதுமக்கள் அங்கு கூடினர். தகவல் அறிந்து ஊட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வந்து அந்த போலீஸ்காரரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையே, மாணவியின் பெற்றோர் போலீசாரை தொடர்பு கொண்டு வழக்குப்பதிவு செய்தால் கல்லூரி மாணவி படிப்பு பாதிக்கப்படலாம், சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், எனவே வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்றும் கூறிவிட்டனர். ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரரை கல்லூரி மாணவி செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
