பிரிண்டிங் பிரஸ் முன்பு நிறுத்தியிருந்த பைக் திருடிய முன்னாள் காவலர் கூட்டாளியுடன் பிடிபட்டார்

 

சென்னை: ஜாம்பஜாரில் பிரிண்டிங் பிரஸ் முன்பு நிறுத்தி இருந்த பைக் திருடிய வழக்கில் முன்னாள் காவலர் ஒருவரை போலீசார் அவரது கூட்டாளியுடன் கைது செய்தனர். சென்னை ஜாம்பஜார் வாணியர் தெருவில் உள்ள பிரிண்டிங் பிரஸ்க்கு கடந்த 11ம் தேதி வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, பைக் மாயமாகி இருந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, பைக்கை திருடியவர் கடலூரை சேர்ந்த ஜெயச்சந்திரன்(44) என தெரிய வந்தது.

மேலும் இவர் கடந்த 2008ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். மெரினா காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். அவர் மது போதைக்கு அடிமையாகி, அவரது மனைவி தேன்மொழியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி பணி முடிந்து போதையில் வீட்டிற்கு வந்த ஜெயசந்திரன், தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அவரது மனைவி தேன்மொழி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பிறகு வீட்டில் உள்ள பொருட்களை விற்று மது வாங்கி குடித்து வந்தார். அதோடு இல்லாமல், பணியில் இருந்தபோது, கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை கூட்டாளிகளுடன் திருடி விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்பட்டவர் என தெரியவந்தது. பணியில் ஒழுங்கினமாக செயல்பட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு பிறகு பணியில் இருந்து ஜெயசந்திரன் நீக்கப்பட்டது தெரியவந்தது.

அதைதொடர்ந்து ஜெயசந்திரன் தனது கூட்டாளியான பைக் மெக்கானிக் யூசப் உதவியுடன் பிரிண்டிங் பிரஸ் முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடியது உறுதியானது. அதைதொடர்ந்து ஜாம்பஜார் போலீசார் முன்னாள் காவலர் ஜெயசந்திரன் மற்றும் அவரது கூட்டாளியான மெக்கானிக் யூசப் ஆகியோரை அதிரடியாக நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: