தர்மபுரி: இந்தியாவிலேயே தமிழகம் வளர்ந்து வருகிற மாநிலங்களில் முதலிடத்தில், இரட்டை இலக்கத்தில் 11.19 சதவீத வளர்ச்சியோடு நடைபோடுவதாக தர்மபுரி அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தர்மபுரி மாவட்டத்திற்கு ரூ.254.59 கோடியில் 28,639 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரூ.33.96 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா, ரூ.15.39 கோடியில் முடிவுற்ற பணிகளுக்கான திறப்பு விழா நேற்று நடந்தது.
கலெக்டர் சதீஸ் தலைமை வகித்தார். வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், உணவு துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து பேசியதாவது: கல்வி, தொழில் வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்பு, விவசாயம் என 2030க்குள் தமிழ்நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
வரும் 2030க்குள் 8 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பள்ளி இடைநிற்றல் முழுவதும் தடுக்கப்படும். அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை என பல வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். இவ்வாறு அனைத்து வகையிலும் நம் அரசு உங்களுக்கு துணை நிற்கிறது.
இந்தியாவிலேயே நம் தமிழகம், வளர்ந்து வருகிற மாநிலங்களில் முதல் இடத்தில் இரட்டை இலக்கத்தில் 11.19 சதவீத வளர்ச்சியோடு நடைபோடுகிறது. இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், பல்வேறு நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்றால், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும். தமிழகம் முழுவதும், 4 லட்சம் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகிறது.
அத்தனை சுய உதவி குழுக்களுக்கும் தாய் வீடு என்றால், அது தர்மபுரி மாவட்டம் தான். 1989ல் இந்தியாவிலேயே முதல்முறையாக, நம் கலைஞர் தர்மபுரி மாவட்டத்தில் தான், சுய உதவி குழுக்களை ஆரம்பித்தார். நம் முதலமைச்சர் அந்த குழுக்களின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். பட்டா கேட்டு பொதுமக்கள் அரசாங்கத்தை நாடி சென்ற காலம் போய், இன்று அரசாங்கமே தேடி வந்து பட்டாக்களை வழங்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 24 லட்சம் பட்டாக்களை, தமிழக அரசு வழங்கியுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம், 3 லட்சம் வீடுகள் கட்டப் பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் மாற்றத்திற்கான திறனாளிகளாக மாறி உள்ளனர். நம் முதல்வர் மாற்றுத்திறனாளிகளை உள்ளாட்சி அமைப்பில் நேரடியாக நியமனம் செய்யும் முறையை இந்தியாவிலேயே தமிழகத்தில் கொண்டு வந்துள்ளார். இவ்வளவு நாள் மற்றவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக குரல் கொடுக்கும் நிலையை மாற்றி, மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களுக்காக குரல் கொடுக்கும் நிலையை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
இவ்வாறு மாணவர்கள், விவசாயிகள், மாற்றுத்தினாளிகள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினருக்கும், நம் முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உங்களுக்காக உழைக்க நம்முடைய அரசும், நம்முடைய முதலமைச்சரும் காத்துக் கொண்டிருக்கிறார். ஆகவே, உங்களுக்கு பக்க பலமாக இருக்க கூடிய முதலமைச்சருக்கு, தொடர்ந்து உங்களுடைய ஆதரவை தர வேண்டும். இவ்வாறு துணை முதல்வர் பேசினார்.
