* வாக்காளர்களுக்கு ‘வழிகாட்டி’ செயலிகள் (Voter Helpline App): இனி வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான பணிகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை. பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், டிஜிட்டல் வாக்காளர் சீட்டை பதிவிறக்கம் செய்தல் என அனைத்தையும் இந்த ஒரே செயலி மூலம் செய்து கொள்ளலாம்.
* .உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார்? (Know Your Candidate): வேட்பாளர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளனவா? அவரது சொத்து மதிப்பு என்ன? போன்ற விபரங்களை வாக்காளர்கள் தெரிந்து கொண்டு, ஒரு விழிப்புணர்வுள்ள வாக்காளராக வாக்களிக்க இந்தச் செயலி உதவும்.
* மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் (Saksham App): மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. குரல் வழி உதவி, வரிசையில் நிற்காமல் வாக்களிக்க அனுமதி போன்ற வசதிகளை இதன் மூலம் கோரலாம்.
* 100 நிமிட அதிரடி (cVIGIL): தேர்தல் விதிமுறை மீறல்கள், பணப்பட்டுவாடா அல்லது பரிசுப் பொருட்கள் விநியோகம் குறித்து பொதுமக்கள் இந்தச் செயலியில் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்துப் பதிவேற்றலாம். புகார் அளிக்கப்பட்ட 100 நிமிடங்களுக்குள் தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை எடுப்பார்கள். புகார் அளிப்பவரின் விபரம் ரகசியமாக வைக்கப்படும்.
* இஎஸ்எம்எஸ் (Seizure Management): தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்படும் பணம், மதுபானம் மற்றும் இதரப் பொருட்களைக் கண்காணிக்க இந்தச் செயலி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் எங்கு, எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதைத் தலைமைத் தேர்தல் அதிகாரி நேரடியாகக் கண்காணிக்க முடியும்.
* வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கான ‘சுவிதா’ (Suvidha): வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலம் நடத்த அனுமதி கோரி இனி அலைய வேண்டியதில்லை. ‘சுவிதா’ போர்டல் மூலம் ஆன்லைனிலேயே விண்ணப்பித்து அனுமதி பெறலாம். இதில் ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படுவதால் முறைகேடுகளுக்கு இடமிருக்காது.
* வாக்குச்சாவடியில் ‘பூத் ஆப்’ (Booth App): வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் ஏற்படும் நீண்ட வரிசையைத் தவிர்க்க ‘பூத் ஆப்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் சீட்டில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் வாக்காளரை விரைவாக அடையாளம் காண முடியும். இது கள்ள ஓட்டுகளைத் தடுக்கவும், வாக்குப்பதிவு சதவீதத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் உதவும்.
* இமாலயப் பணிக்கு ‘என்கோர்’ (ENCORE): தேர்தல் ஆணையத்தின் முதுகெலும்பாக ‘ENCORE’ மென்பொருள் செயல்படுகிறது. வேட்புமனுத் தாக்கல் முதல், வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு வரை அனைத்துப் பணிகளும் இதன் மூலமே ஒருங்கிணைக்கப்படுகின்றன.
* புதிய வரவு (ECINET Mobile App): தேர்தல் ஆணையம் தனது 40-க்கும் மேற்பட்ட சேவைகளை ஒருங்கிணைத்து ‘ECINET’ என்ற ஒரே குடைக்கீழ் கொண்டு வந்துள்ளது. இது வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் என அனைவருக்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட தளமாக அமையும்.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தேர்தலை ஊழலற்றதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்ற முடியும் என நம்புகிறோம். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் இந்த டிஜிட்டல் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தேர்தல் ஆணையத்தின் இந்த ‘டிஜிட்டல்’ அதிரடிகள் ஜனநாயகத் திருவிழாவைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
