ராமேஸ்வரம்: இந்திய பெருங்கடலில் சந்தேகப்படும்படி சென்ற ஒரு ஆழ்கடல் மீன்பிடி படகை, இலங்கை கடற்படையினர் கண்டறிந்து திக்கோவிட்ட கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று சோதனை செய்தனர். அதில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 478 கிலோ ஐஸ் போதைப்பொருள், 176 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மற்றும் 11 துப்பாக்கிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக படகிலிருந்த இலங்கையை சேர்ந்த 10 பேரை கடற்படையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.300 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போதைப்பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. கடத்தலில் மேலும் தொடர்புடையவர்கள் குறித்து இலங்கை கடற்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
