பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் உட்பட 23 பேரை தீவிரவாதிகளாக ஒன்றிய அரசு அறிவித்தது

புதுடெல்லி: பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளைச் சேர்ந்த 23 பேரை தீவிரவாதிகளாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் திட்டங்கள், நிதி திரட்டுதல், ஆயுத கடத்தல், ஆட்சேர்ப்பு, ஊடுருவுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் தீவிரவாதிகளாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில், ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்புடைய 23 பேர் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் இந்தியர்கள். அவர்கள் தற்போது பாகிஸ்தான் அல்லது பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்பவர்கள்.

மற்ற 17 பேரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். ‘டாக்டர்’, ‘அப்துல் மன்னான்’ என்ற மாற்று பெயர்களுடைய பாகிஸ்தான் ஜெய்ஷ் இ முகமது செயல்பாட்டாளரான முகம்மது முசாத்திக், தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவர்களில் முக்கிய நபர்களில் ஒருவராக உள்ளார். இவர் அயோத்தி ராமர் கோயில், நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகம், பானிபட்டில் உள்ள ஐஓசிஎல் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை உளவு பார்க்க முக்கிய காரணமாக இருந்தவர். டிரோன்கள் மூலம் இந்தியாவுக்கு அயுதங்களை அனுப்புவதிலும் ஈடுபட்டுள்ளார்.

மசூத் இல்லியாஸ், மசூத் அசாரின் நெருங்கிய கூட்டாளி. காஷ்மீருக்குள் தீவிரவாத ஊடுருவலுக்கான முக்கிய ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்ளை தீவிரவாத அமைப்புகளில் சேர்ப்பது, நிதி திரட்டுவது ஆகியவை இவர் மீதான குற்றச்சாட்டுகள். முப்தி முகமது அஸ்கர் கான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் ராணுவ பிரிவின் தலைவராக உள்ளார். நக்ரோட்டாவில் ராணுவ முகாம் மீதான தாக்குதலில் முக்கிய சதிகாரர். ஹபீஸ் அப்துல் ஷகூர், குலாம் பரித் உள்ளிட்ட பாகிஸ்தானியர்களும் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தீவிரவாதிகள் பட்டியலில் உள்ள லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீது, ஜெய்ஷ் இ முகமது தலைவன் மவுலானா மசூத் அசார், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் ஆகியோருடன் தற்போதைய 23 பேரும் இணைந்து, இந்தியாவில் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: