திருமலை: ஆந்திராவில் ஜொன்னகிரியில் தங்கம் உற்பத்தி தொடங்கிய நிலையில், குப்பத்திலும் தங்கம் கண்டறியப்பட்டு உள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தனது சொந்த தொகுதியான குப்பம் சட்டமன்ற தொகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் குப்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரியில் தங்கம் இருப்பது கண்டறிப்பட்டு அங்கு தங்கம் சுரங்கம் அமைத்து தங்கம் தோண்டி எடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குப்பத்திலும் தங்கம் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இதை தொடர்ந்து, அவற்றை பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும். முந்தைய அரசு மக்களின் நிலங்களை அபகரிக்க முயன்றது. தற்போது சர்ச்சையில் உள்ள நிலப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. குப்பத்தில் உள்ள கோயில்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிதியிலிருந்து ரூ.34 கோடி செலவில் மேம்படுத்தப்படும். குப்பத்தின் மேம்பாட்டில் முந்தைய அரசு கோஷ்டிப் பூசலுடன் செயல்பட்டது. குப்பத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டதாக கூறி மக்களை தவறாக வழிநடத்தி திரைப்பட படப்பிடிப்பு தளங்களை அமைத்தனர். குப்பத்திற்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும் வகையில் யானை சவாரி, பாறை ஏறுதல் மற்றும் மலையேற்றம் போன்ற சுற்றுலாத்திட்டங்களை உருவாக்கி வருகிறோம்.
ராயலசீமா கோஷ்டிப் பூசல்களை பற்றி திரைப்படங்கள் எடுக்கும் காலம் முடிந்துவிட்டது.
இப்போது ராயலசீமாவின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் எனது அரசியல் வாழ்க்கை 50 ஆண்டுகளை நிறைவு செய்யும். இடையில் ரவுடிகள் அரசியலில் நுழைந்ததால் மாநிலத்தில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அமராவதிக்கு பதிலாக புதிய பெயர்களால் மக்கள் குழப்பமடைய செய்கிறார்கள். அமராவதியின் வளர்ச்சியே அரசின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.
