நன்கொடை முறைகேடுக்கு மத்தியில் ராமர் கோயில் அறக்கட்டளை அயோத்தியில் நாளை கூடுகிறது

அயோத்தி: நன்கொடை முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் ராமர் கோயில் அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டம் அயோத்தியில் நாளை நடக்க உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய நன்கொடை மற்றும் காணிக்கை பணம், நகைகள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உபி அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு பல்வேறு முறைகேடுகளை ஆதாரங்களுடன் கண்டறிந்து, கோயில் ஊழியர்கள் 8 பேரை கைது செய்துள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் முக்கிய நபர்கள் காப்பாற்றப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இதற்கிடையே, ராமர் கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் ராஜினாமா செய்தனர். அறக்கட்டளையின் சிறப்பு அழைப்பாளர் கோபால் ராவ் மீதும் வலுவான சந்தேகங்கள் உள்ளன. இந்நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அயோத்தியில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ளது. இதில், ராமர் கோயில் விவகாரங்களை நிர்வகிக்க தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஒருவரை நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், குற்றச்சாட்டு தொடர்பான சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை குறித்தும், கோயில் நிதி விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Related Stories: