சண்டிகர்: பஞ்சாபில் 2027ம் ஆண்டு நடைபெற உள்ள மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் தொடர்பான பல்வேறு குழுக்களின் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கட்சியின் பிரச்சாரக் குழுவின் தலைவராக காங்கிரஸ் நியமித்துள்ளது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங் தொடர்வார் என்று கட்சி அறிவித்து இருந்தது. இந்நிலையில் சன்னியை மாநில தலைவர் பதவிக்கு மீண்டும் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல எம்எல்ஏக்கள் அவரது ஆதரவு தெரிவித்துள்ளனர். பஞ்சாப் காங்கிரஸ் மாநிலப் பிரிவில் கலகம் வெடித்திருப்பதாக கருத்துக்கள் எழுந்துள்ளது. இதனை மாநிலத் தலைவர் அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங் மறுத்துள்ளார்.
இது குறித்து அம்ரிந்தர் கூறுகையில்,‘‘பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஒரு மரியாதைக்குரிய தலைவர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் பஞ்சாப் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதை காண்பதே எனது ஒரே நோக்கம். சன்னியையோ அல்லது வேறு யாரையாவதோ கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த கட்சி விரும்பினால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. காங்கிரஸ் ஒற்றுமையாக உள்ளது. எங்களது எதிரிகள் வேண்டுமானால் கனவு காணலாம். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை. சன்னி, வாரிங் மற்றும் பிற தலைவர்கள் அனைவரும் ஒன்றாகவே இருப்பார்கள்” என்றார்.
