15வது நாளாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்; உண்ணாவிரதம் இருக்கும் வாங்சுக்கின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது: அபிஜித் திப்கே தகவல்

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் பிரதான் பதவி விலக கோரி நடக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் 15வது நாளை எட்டியது. இதில் உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சுக்கின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 20ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், சிபிஐ(எம்எல்)லிபரேஷன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டம், நேற்று 15-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உண்ணாவிரதம் 7 வது நாளை எட்டியது.

இது குறித்து சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,
வாங்சுக் உடல் நிலை மோசமடைந்து வருகிறது. அவரது உடல் எடை 5 கிலோ குறைந்துள்ளது. தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்வதற்கு பிரதமர் இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பார். மாணவர்கள் உயிரிழந்த பிறகும், பிரதமர் மோடி பிரதானை பதவியிலிருந்து நீக்க மறுக்கும் அளவுக்கு அவர் ஏன் அவ்வளவு முக்கியமானவரா?. வாங்சுக்கின் உடல்நிலை மேலும் மோசமடைந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

Related Stories: