திரிணாமுல் மம்தா அணியின் மாநிலத் தலைவர் பதவி விலகல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகின்றது. 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து சென்றனர். இதேபோல் கட்சியின் எம்பிக்களிலும் ஒரு பிரிவினர் இந்திய குடிமக்கள் கட்சியின் இணைந்து பாஜவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் முதல்வரும் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையிலான அணியின் மாநில தலைவர் சந்திரமா பட்டாச்சார்யா நேற்று அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியின் மகளிர் பிரிவை வழிநடத்திய முக்கிய தலைவராகவும் இருந்த இவர், கட்சியின் வங்கி கணக்குகளை நிர்வகிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட கையொப்பம் இடும் பொறுப்பில் இருந்தும், தேர்தல் ஆணையத்தின் முன் ஆஜராவதற்கான மம்தா பானர்ஜியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி பொறுப்பில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டுள்ளார். இவர் விரைவில் எதிர் அணியில் சேரலாம் என்று கூறப்படுகிறது.

பாஜ ஆதரவு பெற்றவர்கள் பிளவை உருவாக்குகிறார்கள்: மம்தா குற்றச்சாட்டு
மம்தா பானர்ஜி நேற்று நேற்று வெளியிட்டுள்ள காணொளி செய்தியில்,‘‘பாஜ கட்சியின் தூண்டுதலின் பேரில் எனக்கு எதிராகச் செயல்படுவதற்குப் பதிலாக, அதிருப்தியாளர்கள் நேரடியாக பாஜவில் சேர வேண்டும். பாஜ ஆதரவுடனான இந்த நேர்மையற்ற விளையாட்டை விளையாடுவதற்குப் பதிலாக, கட்சியை விட்டு வெளியேறும் நன்றிகெட்ட துரோகிகளுக்குத் துணிச்சல் இருந்தால், நேரடியாக பாஜவில் சேர்ந்து என்னை எதிர்கொள்ள வேண்டும். பதவியில் இருந்த போது, என்னிடம் வந்து உங்கள் கருத்து வேறுபாடுகளை ஏன் சொல்லவில்லை?’’ என்றார்.

Related Stories: