திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மலைப்பாதையில் 3,550 படிகளை 116 வயது மூதாட்டி ஏறிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 116 வயது மூதாட்டி, தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை வழிபாடு செய்ய நேற்று திருப்பதி வந்தார். குடும்பத்தில் உள்ள அனைவரும் பஸ்சில் திருமலைக்கு செல்லலாம் என்று முடிவு செய்த நிலையில் மூதாட்டி மட்டுமே அலிபிரி மலைப்பாதையில் நடந்து சென்று திருமலையை அடைவேன் என உறுதியாக கூறிவிட்டார்.
இதனால் அவருடன் வந்த அனைவரும் மூதாட்டியுடன் படியேறினர். சுமார் 9 கிலோ மீட்டர் தூரம் 3,550 படிகள் கொண்ட அலிபிரி மலைப்பாதையில் மூதாட்டி உட்பட அனைவரும் நடந்து சென்றனர். இதனை கவனித்த அவ்வழியாக நடந்து சென்ற சக பக்தர்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்தனர். ழுமலையான் மீது மூதாட்டி அளவு கடந்த பக்தி கொண்டுள்ளதாகவும் இதற்காக அவர் சிறுவயது முதலே படியேறி சென்று சுவாமி தரிசனம் செய்வார் என்றும், அதேபோன்று தற்போது தள்ளாடும் வயதிலும் அதே உறுதியுடன் அவர் படியேறி சென்று தரிசனம் செய்ததாகவும் அவருடன் வந்த உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஏழுமலையானை படியேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய வயது முக்கியமில்லை, மன உறுதி இருந்தால் போதும் என்பதை மூதாட்டி தனது பக்தியின் மூலம் நிரூபித்துள்ளார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
