அரசு வாகனங்களை தவெக நிர்வாகி வழங்கி ரீல்ஸ் வெளியிட்டதால் சர்ச்சை: அதிகாரிகளுக்கு கலெக்டர் கண்டிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 429 பஞ்சாயத்துகளில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் குப்பை சேகரிக்க மின்னணு (பேட்டரி) 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் வாகனங்கள் வந்ததால் நன்னடத்தை விதிமுறைகளால் பஞ்சாயத்துகளுக்கு வழங்காமல், அந்தந்த யூனியன் அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது புதிய அரசு வந்ததும் அந்தந்த யூனியன் பிடிஓக்கள், ஊராட்சி மண்டல துணை பிடிஓ, ஊராட்சி செயலர், வண்டி இயக்கக்கூடிய பயிற்சி பெற்ற தூய்மைப் பணியாளர், தூய்மை காவலர்களுக்கு வண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.

கமுதி யூனியனில் 53 ஊராட்சிகள் உள்ளன. இங்கு 43 வண்டிகள் வந்ததாக கூறப்படுகிறது. மே 25ம் தேதி முதற்கட்டமாக 5 வாகனங்களை ஊராட்சிகளுக்கு வழங்க பிடிஓக்கள் முடிவு செய்திருந்தனர். இதனை அறிந்த தவெகவின் ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் மதன் தனது ஆதரவாளர்களுடன் வந்து பிடிஓக்களிடம் சாவியை வாங்கி, துாய்மைப் பணியாளர்களுக்கு சாவியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் வீடியோ தவெகவின் ரீல்ஸ் வலைதளங்களி்ல் பரவியது.

மக்கள் பிரதிநிதியாக இல்லாதவர்கள், அரசு நியமன பதவிகளில் இல்லாதவர்கள், அலுவலக விவகாரங்களில் அத்துமீறி தலையிட்டது சர்ச்சையானது. இதற்கு பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மாவட்ட அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதனால் யூனியன் அலுவலர்களை கலெக்டர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

* திருப்பூர் தெற்கு எம்எல்ஏ ஆபீசில் தமிழ்நாடு அரசின் முத்திரை நீக்கம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. திருப்பூர் தெற்கு எம்எல்ஏ அலுவலகமும் நேற்று முன்தினம் கணபதி ஹோமம் உள்ளிட்ட மத சடங்குகள் நடத்தப்பட்டு சட்டமன்ற உறுப்பினரின் குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் முன்னிலையில் பயன்பாட்டிற்கு வந்தது.

கடந்த ஆண்டுதான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சியின்போது கட்டிடத்தின் முகப்பு பகுதியில் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ கோபுர முத்திரையுடன் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என குறிப்பிடப்பட்டிருந்தது. எம்எல்ஏ அறையிலும் அரசின் முத்திரை இடம் பெற்றது. ஆனால், நேற்று முன்தினம் தவெக உறுப்பினரால் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட எம்எல்ஏ அறையில் தமிழ்நாடு அரசின் முத்திரை அகற்றப்பட்டு முதல்வர் விஜய்யின் புகைப்படம் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: