ரீல்ஸ் ஆட்சி என விமர்சனம் எழுந்தும் திருந்தவில்லை.. முதலீட்டாளர்களுக்கு ரீல்ஸ் மூலம் அழைப்பு விடுத்த தவெக அமைச்சர்: திருந்த மாட்டாங்கய்யா…திருந்தவே மாட்டாங்க…

சென்னை: முதலீட்டாளர்களுக்கு ரீல்ஸ் மூலம் அழைப்பு விடுத்த தொழில் துறை அமைச்சரின் செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. பிளாட் விற்கும் நிறுவனங்களுக்கு விளம்பர நடிகை போல் பேசுவதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருவது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள், மற்ற தலைமுறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் செய்தித்தாள்களைப் படிப்பதில்லை, தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பதில்லை.

வாசிப்புப் பழக்கம் அறவே கிடையாது. இவர்களுக்கான உலகம் ஸ்மார்ட்போன்களுக்குள் மட்டுமே சுருங்கியுள்ளது. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் என்பது இவர்களைப் பொறுத்தவரை தனி உலகம். இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு எழுத்து வடிவிலான செய்திகளை விட காட்சி வாயிலான செய்திகளே அதிகம் பிடிக்கிறது. அதிலும் இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டு, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் கலாச்சாரம் தலையெடுத்தப் பிறகு இது வேறு ஒரு பரிணாமத்தை அடைந்தது.

இதை பயன்படுத்தியே விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆட்சியை பிடித்தது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. சினிமாவில் விஜய் பேசும் பஞ்ச் டயாலாக்குகளை போன்று அவரது மேடை பேச்சும் இருந்ததால் அதை ரீல்ஸ் ஆக வெளியிட்டே மாற்றத்தை ஏற்படுத்தி விட்டனர் இன்றைய இளசுகள் என்றும் விவாதங்கள் எழுந்துள்ளது.  இளைஞர்களின் ரீல்ஸ் மோகம் ஒருபுறம் இருந்தாலும், அவர்களால் ஆட்சிக்கு வந்த தவெகவினர் நடத்தும் அலப்பறைகள் தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கும் வகையில் உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

விஜய் முதல்வராக பதவி ஏற்றதிலிருந்து முதல்வரின் அறை உள்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்பு தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர். ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதல்வர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதல்வரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து இன்ஸ்டா ரீல்ஸ்களாக எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும் டிரெண்டாகவும் மாறியுள்ளது.

இதனால் தான் தவெக அரசு பொறுப்பேற்று 3 வாரங்கள் ஆகியும் ஒன்னும் நடக்கவில்லை என்ற விமர்சனங்களும் ரீல்ஸ்களாக அனல் பறக்கிறது. எனவே தான், சட்டப் பேரவையில் நடைபெற்ற முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, ”ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் மக்களுக்கான ஆட்சியை முதல்வர் நடத்த வேண்டும்” என விமர்சித்து இருந்தார்.

மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், “சமூக வலைதளங்கள் மற்றும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி, சிறுபிள்ளைகள் மூலமாக அவர்களின் பெற்றோர்களிடமும் பெரியவர்களிடமும் திட்டமிட்டுப் பிரசாரம் செய்ய வைத்து, ஆட்சிக்கு வந்துள்ளனர். இது நம் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது” என்றும் அவர் ஓபனாகப் பேசினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அரசின் கொள்கைகள் குறித்து தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கோர்ட் அணிந்து கொண்டு ரீல்ஸ் வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

அதற்கு காரணம், கடந்த திமுக ஆட்சியில் தொழில் துறை வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக அவ்வப்போது தொழில் துறையினருடன் கலந்துரையாடல் நடத்தப்படும். இதில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து அழைப்பு விடுக்கப்படும். சந்தேகங்கள் இருந்தால் முதலீட்டாளர்கள் நேரடியாக தங்களுக்கான சலுகைகளை கேட்டு பெற்று தொழில் தொடங்க முன்வருவார்கள்.

மேலும் அப்போதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் குழுவினர் பெரும் தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து உரையாடி முதலீடுகளை கொண்டு வந்தனர். இதன் மூலம் பல லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வந்தது. கடந்த கால அதிமுக ஆட்சியிலும் இப்படித்தான் இருந்தது. நிலைமை இப்படி இருக்கும் போது, தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா கோட் அணிந்து கொண்டு தவெகவின் முக்கிய ஆயுதமாக கருதப்படும் ரீல்ஸ் போட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது அரசு நிர்வாகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்த ரீல்ஸ் பதிவில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பேசியிருப்பதாவது: ‘தமிழகம் எதிர்காலத்திற்காக காத்திருக்கவில்லை, அதை நாங்கள் கட்டமைக்கிறோம். கோப்புகள் மற்றும் ஒப்புதல்களுக்காக நீண்ட காலம் காத்திருக்க வைக்கும் அரசை யாரும் விரும்புவதில்லை. அதனை சரிசெய்யவே முதல்வர் விஜய் என்னை நியமித்துள்ளார்.

நமது அரசு 21 நாட்களில் விரைவான அனுமதி மற்றும் ஒற்றைச் சாளர ஒப்புதல்களுக்கு உறுதியளிக்கிறது. பிரச்னைகளை என்னிடமும், முதல்வரிடமும் நேரடியாக கொண்டு செல்லலாம் என்று உறுதியளிக்கிறோம். ஏஐ நகரங்கள் முதல் பசுமை ஹைட்ரஜன், மேம்பட்ட உற்பத்தி மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் என பல புதுமைகளை செயல்படுத்தும் ஒரு சூழலை எங்கள் அரசு உருவாக்குகிறது. முதல்வர் விஜய்யின் தொலைநோக்கு தலைமையின் கீழ், தமிழகத்தை இந்தியாவின் முதலீடு மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம்.

எதிர்காலம் இங்கே உள்ளது. எனவே தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தேர்தல் பிரசாரங்களில் ரீல்ஸ் மூலமாக கவனம் ஈர்த்த கீர்த்தனா, இப்போது தொழில் துறை அமைச்சரான பின்னரும் முதலீடுகளை ஈர்க்க அதே ரீல்ஸ் வழிமுறைகளை பயன்படுத்துவது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அமைச்சர் கீர்த்தனாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

* விளம்பர மாடல் போல் அமைச்சர்
நெட்டிசன் ஒருவர் தனது பதிவில், ‘‘தமிழக தொழில் துறை அமைச்சர் இன்ஸ்டாவில் தமிழகத்தில் முதலீடு ஈர்க்க விளம்பரம் செய்கிறார். ஏதோ பிளாட் விற்கிற நிறுவனங்களுக்கு ஒரு விளம்பர மாடல் பேசுவது போல் பேசுகிறார். நடிகர் விஜய் அமைச்சரவை எந்த அளவுக்கு கேவலமாக மாறி வருகிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம்.. மற்ற மாநிலங்கள் மற்றும் தொழில் துறை சார்ந்த உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் கேவலமாக பார்த்து சிரிக்கும் வகையில் நடவடிக்கை உள்ளது காலக் கொடுமை…’’ என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: