கர்நாடக துணை முதலமைச்சர் மேகதாதுவில் அணை கட்டுவோம் என கூறியது கண்டிக்கத்தக்கது: ஜி.கே.வாசன் கண்டனம்

சென்னை: கர்நாடக துணை முதலமைச்சர் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறியதற்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக துணை முதலமைச்சர் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று தெரிவித்த கருத்து விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி தண்ணீர் இல்லை என்றால் டெல்டா பாலைவனம் ஆகிவிடும் என்று தெரிந்தே கர்நாடக காங்கிரஸ் அரசு வீண்பிடிவாதம் பிடிக்கிறது. ஏற்கனவே விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கிறார். அப்போது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் பேசிய தவறான கருத்து குறித்து எடுத்துக்கூறி மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: