அதிமுகவை உடைத்து குளிர்காய்வது என்ன நியாயம்? தவெகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர்: அதிமுக எம்பி தனபால் கண்டனம்

சென்னை: அதிமுக எம்பி தனபால் நேற்று பசுமைவழி சாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கட்சியை பொறுத்தவரைக்கும் எம்ஜிஆர் உருவாக்கிய ஒரு இயக்கம். ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட ஒரு இயக்கம். இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இன்றைக்கு தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து தேர்தல் நடத்துகிறது. அந்த தேர்தல் முடிவு வந்து கிட்டத்தட்ட 21 நாளில் ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியிலே சேருகிறார்கள் என்று சொன்னால் இதிலே ஆதாயம் இருக்கின்றது என்றுதான் நினைக்க வேண்டியது இருக்கிறது. அவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் நாடாளுமன்றம் செல்ல 2 முறை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார்கள். ஒருமுறை வெற்றிபெற்றார், ஒருமுறை தோல்வி அடைந்தார். நான் பெயரை சொல்ல விரும்பவில்லை.

அடுத்து, சட்டமன்ற உறுப்பினராக ஆகும் வாய்ப்பை எடப்பாடி ஏற்படுத்திக் கொடுத்தார். அப்படி உருவாக்கி கொடுத்த விசுவாசம் இல்லாமல், அவர்களுக்கே துரோகம் செய்துவிட்டு வெளியே சென்றிருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் விசுவாசம் இல்லை என்பதை காட்டுகிறது. அதிமுக என்ற கட்சியை உடைத்து அதன்மூலம் குளிர்காய்வது என்ன நியாயம். தவெகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர். இது அநாகரிகமான செயல். இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கை வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: