ஈரோடு: ‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்திருப்பது, அவர்களுக்கு வாக்களித்த மக்களை அவமானப்படுத்துகிற செயல்’’ என சண்முகம் தெரிவித்தார். கேரளா மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறல் கண்டித்து ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பங்கேற்றார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் எந்த ஒரு ஆதார ஆவணங்களையும் எடுக்கவில்லை என அமலாக்கத்துறை எழுதி கொடுத்து விட்டுச்சென்றுள்ளனர். இது ஜனநாயக அத்துமீறல். ஒன்றிய அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, ஏன் இன்னும் பினராயி விஜயனை கைது செய்யவில்லை? என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பினராயி விஜயன் பதில் அளித்துள்ளார். இதன்மூலம் ராகுல்காந்தி மகிழ்ச்சி அடைந்திருப்பார். பாஜ அரசுக்கு எதிராக, மதசார்பற்ற சக்திகளை ஒன்றுபடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முனைப்பாக உள்ளது. ஒரு நாடு தழுவிய அளவில் பலமாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு அதை விட கூடுதல் பொறுப்பு உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் தலைவர் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்.
கேரளா மாநிலத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு நாட்டை பற்றி கவலைப்படாமல், நாட்டின் அரசியல் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் அத்தகைய வார்த்தைகளை ராகுல்காந்தி சொன்னது கண்டிக்கத்தக்கது. பயிர்கடன் தள்ளுபடியில் தமிழக விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் விஜய் முன் வர வேண்டும். தவெக அரசு, தலைமை செயலகத்தையும், அரசு அலுவலகத்தையும் கட்சி பணிக்கு பயன்படுத்துவது சரியல்ல.
தேர்தல் முடிவு வந்து 20 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருப்பது வாக்காளித்த மக்களை அவமானப்படுத்துகிற செயல். இவர்களை நம்பி வாக்களித்திருந்தார்கள். அவர்களுடைய மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்கிற வகையில் வாக்களித்த மக்களின் உணர்வுகளுக்கு விரோதமாக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருப்பது ஏற்புடையது அல்ல.
அப்படி ராஜினாமா செய்தவர்களை அடுத்த சில நிமிடங்களில் தவெகவில் சேர்த்திருப்பதும் ஆரோக்கியமானதல்ல. இதை தவெக தலைமையிடமும் தெரிவித்துள்ளோம். ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து எங்களது மாநிலக்குழு கூடி முடிவெடுக்கும். இவ்வாறு சண்முகம் கூறினார்.
