சென்னை: பக்ரீத் பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபனை சூழ்ந்து கொண்டு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து கழகம் சார்பில் பக்ரீத் பண்டிகையையொட்டி கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து முனையங்களில் இருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற ஊர்களுக்கு செல்ல லட்சக்கணக்கான பயணிகள் படையெடுத்து வந்தனர். ஆனால், போதிய பேருந்து வசதிகள் இன்றிதவிக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு திடீர் விசிட் அடித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் இயக்கம், பயணிகளுக்கான வசதிகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகளுடன் வந்திருந்தார்.
அமைச்சர் ஆய்வு செய்துகொண்டிருந்த சமயத்தில், பேருந்து நிலையத்தின் தளங்களில் நூற்றுக்கணக்கான பயணிகள் மணிக்கணக்கில் பேருந்துகள் இன்றி காத்துக்கொண்டிருந்தனர். அமைச்சரை கண்டதும் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பொறுமையை இழந்து அவரை நோக்கி ஓடி வந்தனர். நொடிப் பொழுதில் அமைச்சரை சுற்றிலும் பயணிகள் முற்றுகையிட்டனர். தென் மாவட்டங்களான மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி செல்ல வேண்டிய பயணிகள், தங்களுக்குரிய பேருந்துகள் வராமல் 3 முதல் 4 மணி நேரம் வரை காத்திருப்பதாக அமைச்சரிடம் கூறினர்.
ஆன்லைனில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்துகள் வரவில்லை. சொகுசுப் பேருந்துகளுக்கு கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்த பயணிகளுக்கு, சாதாரண பேருந்துகள் மாற்றி அனுப்பப்படுவதாக குற்றம் சாட்டினர். மேலும், பேருந்து எப்போது வரும் என்று தகவல் மையத்தில் கேட்டால், அங்கிருக்கும் ஊழியர்கள் முறையான பதிலை அளிப்பதில்லை என பெண்கள் மற்றும் முதியவர்கள் அமைச்சரிடம் நேரடியாக முறையிட்டனர்.
மேலும் நாங்கள் எதற்காக முன்கூட்டியே பணம் கொடுத்து டிக்கெட் புக் செய்ய வேண்டும். குடும்பத்தோடு குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த நள்ளிரவில் எங்கு போவது எனப் பயணிகள் அமைச்சரின் முகத்திற்கு நேராக கேள்வி எழுப்பினர். இதனால் அமைச்சருடன் வந்த போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பயணிகளைச் சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால், பயணிகள் தங்களுக்கு உடனடியாகப் பேருந்து வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் அங்கு கடும் வாக்குவாதம் நிலவியது. பயணிகளின் சரமாரியான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அமைச்சர் பார்த்திபன் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக ‘‘உங்களின் சிரமங்களை நான் உணர்கிறேன். வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ காலங்களில் ஏற்படும் கூடுதல் கூட்ட நெரிசலால் சில பேருந்துகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஏசி பேருந்துகளுக்கு பதிலாக சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்ட விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும். அனைத்துப் பிரச்னைகளும் படிப்படியாகச் சரி செய்யப்பட்டு, பேருந்து இயக்கங்கள் முழுமையாகச் சீரமைக்கப்படும்’’ என பயணிகளிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமைதி சூழல் நிலவியது.
இதையடுத்து அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டு மாற்று ஏற்பாடுகள் செய்து பயணிகள் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். பொதுவாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் போக்குவரத்து மேலாண்மையை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
* ‘நீ நல்லா சாப்பிட்டிருக்க… நான் சாப்டல…’பயணிகளிடம் அமைச்சர் சர்ச்சை பேச்சு
போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபனின் இந்த ஆய்வின் போது இளைஞர் ஒருவர் தான் முன்பதிவு செய்திருந்த பேருந்து நேரம் கடந்தும் வரவில்லை என அமைச்சரிடம் முறையிட்டார். ஆனால் அதற்கு அமைச்சர் பார்த்திபன் ‘நீ நல்லா சாப்பிட்டிருக்க…நான் இன்னும் சாப்பிடல…நீ நல்லா சாப்பிட்டிருக்க நான் இன்னும் சாப்பிடல…’ என எரிச்சலூட்டும் வகையில் பேசியது பயணிகளிடையே முகம் சுளிக்க வைத்தது.
இதுகுறித்து அந்த பயணி நிருபர்களிடம் கூறியதாவது : நான் 10.45 மணி பேருந்தில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தேன். மணி 11.30 தாண்டியும் பேருந்து இன்னும் வரவில்லை. அதிகாரிகள் முறையாக பதில் சொல்லவில்லை. அமைச்சரிடம் கேட்டால் சம்பந்தமே இல்லாமல் ‘நீ நல்லா சாப்பிட்டிருக்க நான் சாப்பிடல என கூறுகிறார். நான் சாப்பிட்டுவிட்டு வருவதும் சாப்பிடாமல் வருவதும் என்னுடைய விருப்பம்.
இதெல்லாம் ஒரு பதிலா?’ அதேபோல், நகருக்குள் இருந்து கிளாம்பாக்கத்துக்கு முறையாக பேருந்து இல்லை எனக் கூறியும் பயணிகளிடம் அமைச்சர் வாதம் செய்கிறார். இதுபோன்று பேசிவிட்டு கடைசியில், ‘குறைகள் இருந்தால் சொல்லுங்கள். நிறைகள் ஆக்கிக் கொள்கிறோம்’ என அவர் கூறுவதை எந்தவகையில் ஏற்றுக்கொள்ள முடியும்’’
இவ்வாறு அந்த பயணி கூறினார்.
* ரிசர்வேஷன் செஞ்ச பயணிகளை பஸ்ல இருந்து இறக்கிட்டு அன்ரிசர்வ்ட் பயணிகளை ஏத்தி விட்டோம், பிராப்ளம் சால்வ்ட்! போக்குவரத்து துறை அமைச்சரின் அபார ஐடியா
கிளாம்பாக்கத்தில் பஸ்கள் கிடைக்காமல் நேற்று மக்கள் கடும் அவதிப்பட்டனர். நிலைமையை சீர்படுத்த போக்குவரத்து துறை அமைச்சர் அங்கு வந்தார். அவர் அளித்த பேட்டியைக் கேட்டு செய்தியாளர்களும் அங்கிருந்த பயணிகளும் ஒருசேர அதிர்ச்சி அடைந்தனர். அமைச்சர் பார்த்திபன் கூறியதுதான் இது: பிரச்னை என்னான்னா ரெண்டு தான். ரிசர்வேஷன், அன்ரிசர்வேஷன். இதுல பாத்தீங்கன்னா அன்ரிசர்வ் செஞ்சவங்க அதிகமா வந்துட்டாங்க. குழந்தையோட எல்லாம் இருக்காங்க. எல்லாருக்கும் பதட்டம் வருது.. வண்டி வரல வண்டி வரலன்னு.
நாங்க என்ன செஞ்சோம்னா இந்த முன்பதிவு செஞ்சு பஸ்சுக்குள்ள உக்காந்திருக்காங்கள்ல அவங்ககிட்ட போய், நீங்க கொஞ்சம் இறங்கிட்டு வெயிட் பண்ணுங்க. இந்த அன்ரிசவ்ட் ஆளுகள கொஞ்சம் ஏத்தி அனுப்பிச்சிரலாம்னு சொல்லி அவங்கள பஸ்ல ஏத்தி விட்டுட்டோம்.. அதனால கூட்டம் பாத்தீங்கன்னா குறைஞ்சிருச்சு…. என்றார். அமைச்சரின் இந்த அரிய ஐடியாவை பார்த்து, தீபாவளிக்கு ரிசர்வ் செய்பவர்கள் எல்லாம் இப்போதே கதிகலங்கத் தொடங்கியுள்ளனர்.
