சென்னை: ஆளும் அரசின் நிர்வாகச் சீர்கேட்டாலும், காவல்துறையின் மெத்தனத்தாலும், தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கு இன்று அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தொடரும் கொடூரங்கள்: ஆளும் அரசின் மெத்தனமும், தவெகவினரின் அராஜகமும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆளும் அரசின் நிர்வாகச் சீர்கேட்டாலும், காவல்துறையின் மெத்தனத்தாலும், தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கு இன்று அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. அதற்கு உதாரணமாக தூத்துக்குடி அருகே வேன் ஓட்டுநர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் போராடும் அவலம் நடந்தேறியுள்ளது.
கட்சியினரின் அராஜகம் ஒருபுறம் என்றால், மறுபுறம், பிஞ்சுக் குழந்தைகளுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகின்றன. கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் தொல்லை அளித்த கொடூரம் நெஞ்சைப் பதற வைக்கும் நிலையில், தற்போது சேலம் எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மின்வாரிய ஊழியர் சீரங்கன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு ஊழியரே இதுபோன்ற கீழ்த்தரமான குற்றத்தில் ஈடுபட்டிருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் துளியும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. தூத்துக்குடி கொலை வழக்கில் தொடர்புடைய தவெக நிர்வாகிகள் மீதும், கோவை மற்றும் சேலத்தில் சிறுமிகளின் வாழ்க்கையைச் சீரழித்த கயவர்கள் மீதும் காவல்துறை எவ்வித அரசியல் தலையீடுமின்றி இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு சட்டத்தின் உச்சபட்ச தண்டனையை விரைவாகப் பெற்றுத் தர ஆளும் அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
