நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த திருப்பலியில் ‘திருத்தந்தை விஜய்’ என்று சிறுவன் கூறியதால் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் தினமும் வழிபாடுகள் நடைபெறும்.
கடந்த 23ம் தேதி மாலை குடந்தை ஆயர் ஜீவானந்தம் தலைமையில் நடந்த திருப்பலியில் நம்பிக்கையாளர்கள் மன்றாட்டின் போது ‘திருத்தந்தை 14ம் லியோ’ என வாசிப்பதற்கு பதிலாக ‘திருத்தந்தை 14ம் விஜய்’ என ஒரு சிறுவன் வாசித்து விட்டார். இந்த திருப்பலியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. திருப்பலியில் ‘திருத்தந்தை விஜய்’ என சிறுவன் கூறியது சமூக வலைளத்தங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேராலய அதிபர் இருதயராஜ் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கடந்த 23ம்தேதி மாலை குடந்தை ஆயர் ஜீவானந்தம் தலைமையில் நடந்த திருப்பலியில் நம்பிக்கையாளர்கள் மன்றாட்டு பகுதியில் முதல் மன்றாட்டை படித்த சிறுவன் ‘திருத்தந்தை 14ம் லியோ’ என்று கூறுவதற்கு பதில் 14ம் விஜய் என்று கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது.
பேராலய பணியாளர்களால் நன்கு பயிற்சி பெற்ற பின்னரும் அந்த சிறுவன் அவ்வாறு கூறியது மனதிற்கு நெருடலாகவே இருந்தது. அந்த சிறுவனிடம் விசாரித்த போது பதற்றத்துடன் வாசகமேடையை ஏறியதாகவும், சரியாக திருத்தந்தை 14ம் என்று படித்துவிட்டு ஆரம்பித்ததாகவும் பதற்றத்தில் விஜய் என்று கூறி விட்டதாகவும் கூறினான். அவ்வாறு கூறியது உண்மை.
பேயராலயத்தின் சார்பாக இனி இதுபோல் நடக்கா வண்ணம் பார்த்துக்கொள்ள ஆவண செய்கிறோம். பலரும் பலவிதமான கருத்துகளையும் ஆலோசனைகளையும் கூறினார்கள். அனைவருக்கும் எங்களது நன்றி. இனி ஒருபோதும் வழிபாட்டில் தவறுகள் நடைபெறாது என்று பேராலயத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
