அலங்காநல்லூர் அருகே பரபரப்பு வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை: அமெரிக்க டாலர்களையும் அள்ளினர்

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, சுமார் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, பொதும்பு ஊராட்சிக்கு உட்பட்ட வானவில் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (33). இவரது மனைவி ரெனோ (30). சதீஷ் அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 25ம் தேதி ரெனோ மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கோடை விடுமுறை கொண்டாட்டத்திற்காக, கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த அவர்கள், நேற்று சொந்த ஊர் திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து ரெனோ அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைத்து திறக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 100 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 அமெரிக்கன் டாலர் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் ரெனோ புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருப்பவர்கள் வெளியூர் சென்றதை அறிந்து, கொள்ளை சம்பவத்தை மர்ம நபர்கள் அரங்கேற்றி இருப்பது தெரியவருகிறது.

Related Stories: