சென்னை: எடப்பாடி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் ஒன்றிணைந்த நிலையில் அதிமுக தரப்பு மனுக்கள் மீது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று தனது முடிவை அறிவிக்கிறார். அதேநேரம், அதிமுக கட்சியில் சி.வி.சண்முகம் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதிமுகவை ஒன்றிணைக்கும் நோக்கில் இரு தரப்பினரும் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து சி.வி.சண்முகம் இல்லத்தில் இருந்து எஸ்.பி.வேலுமணி தலைமையில் 14 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் இடையேயான சமரச முயற்சி கைகூடியுள்ள நிலையில் இரு தரப்பினரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அலுவலகத்துக்கு ஒன்றாக சென்றனர். அதேபோல, கொறடா விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் கொடுத்த கடிதத்தையும் திரும்ப பெற்றனர். ஒரே அணியாக இருப்பதாக சபாநாயகரிடம் தெரிவித்தனர். மேலும், எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக நியமிக்க கோரி சபாநாயகரிடம் கடிதம் வழங்கினர்.
அதேபோல, அதிமுக கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமிக்கக் கோரியும் சபாநாயகரிடம் மனு அளித்தனர். ஆனால் சி.வி.சண்முகம் மட்டும் நேரில் செல்லவில்லை. அவருடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது குறித்த விவரங்களும் தெரியவரவில்லை. தனது முடிவை வியாழன் (நேற்று) அறிவிப்பதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். ஆனால் நேற்று பக்ரீத் பண்டிகை என்பதால் தலைமை செயலக ஊழியர்களுக்கு நேற்று விடுமுறையாகும். இதனால், தனது முடிவை சபாநாயகர் இன்று அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சி.வி.சண்முகம் வர மறுத்ததாக கூறப்படுகிறது. அவரை எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட சிலர் நேரில் சென்று சமாதானப்படுத்தி முயன்றனர். அதிமுகவில் அவரும் ஒன்றிணைந்திருப்பதாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார். இந்தநிலையில் பேச்சுவார்த்தை முடிந்தபின் சி.வி.சண்முகம் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றபோது, ‘தற்போது நான் எதுவும் பேச விரும்பவில்லை’ எனக்கூறி எந்த பதிலையும் தெரிவிக்காமல் காரில் ஏறி அவர் கோபத்துடன் புறப்பட்டு சென்றார்.
அவர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய விருப்பம் இல்லாமல் மறுத்ததாக கூறப்படுகிறது. சி.வி.சண்முகத்திடம் தொடர்ந்து வேலுமணி தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயல்வதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த மற்ற அனைவரும் இணைந்த நிலையில், சி.வி.சண்முகத்தின் நிலைப்பாடு என்னவென்று அவர் அறிவிக்காமல் இருக்கிறார்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார். சி.வி.சண்முகத்துடன் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அவரது ஆதரவாளர்களான 18 ஒன்றிய செயலாளர்கள், 3 நகர செயலாளர்கள், 4 பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர். சார்பு அணிகளின் நிர்வாகிகள் பலர் உள்ளனர்.
அவர்களுடன், கட்சியின் எதிர்கால நலன் கருதி எடப்பாடி பழனிசாமி அணியுடன் சேரலாமா அல்லது தவெகவில் இணையலாமா என்பது குறித்து சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி உள்ளிட்ட சில மூத்த நிர்வாகிகள், சி.வி.சண்முகத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்க கூடாது, சேர்த்தால் நாங்கள் வெளியேறுவோம் என்று கூறி வருகிறார்கள். இதனால் அதிமுக கட்சி வட்டாரத்தில் இன்னும் பரபரப்பு அடங்காமல், நீடித்து வருகிறது.
