சென்னை: இன்று நடைபெறுவதாக இருந்த சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்ட தொடக்க விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. முதல்வராக விஜய் ஆட்சி அமைத்த நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று உத்தரவிட்டார். அவரது பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, மே 10ம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றதும் கையெழுத்திட்ட முதல் முக்கிய அரசாணையில் இந்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டமும் ஒன்று.
ஆனாலும், இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்ற கோரிக்கைகள் வலுத்தது. அதற்கு காரணம், விஜய் ஆட்சி பொறுப்பேற்றவுடன் திருச்சியில் மாணவி மீது காதலன் கொலை வெறித்தாக்குதல், திருவாரூர் செய்தியாளர் மீது போதை கும்பல் கொடூரமாக தாக்கியது, புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் என தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்கள் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிப்பதாக உள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்தது.
அதுமட்டுமல்ல, மாற்றுத்திறனாளி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை என இதுபோன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இந்த நிலையில் தான், பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் எப்போது செயல்பாட்டு வரும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது. இந்தப் படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே. பவானீஸ்வரி கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இந்தப் படையில் ஒரு எஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் முதல் கட்டமாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க விழா இன்று மாலை 5 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
முதல்வர் விஜய் டெல்லியில் இருந்து வந்து செய்யும் மிக முக்கியமான பணியாக இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் காவல் வீட்டு வசதி வாரியம் சார்பில் தீவிரமாக நடைபெற்று வந்தன. பிரமாண்ட விழா மேடை அமைக்கப்பட்டு லைட்டுகள் போடப்பட்டது. இருக்கைகள் போடும் பணியும் நடந்து வந்தது. மேலும் இந்த விழாவில் காவல் துறையின் சாகச நிகழ்ச்சியும் இடம் பெறும் வகையில் நேற்று அதற்கான ஒத்திகை நடைபெற்றது.
இந்த பணிகளை, டிஜிடி சந்தீப் ராய் ரத்தோர், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில், நேற்று மாலை 6.30 மணி வரை அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் விழா நேற்று மாலை திடீரென ரத்து செய்யப்படுவதாக காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் விழா ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதற்காக இந்த திட்ட தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான காரணங்கள் எதையும் அரசு சார்பில் தெரிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்வி குறியான நிலையில், இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் விழா திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கான முறையான காரணம் எதுவும் தெரிவிக்கப்படாததும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விதமான கேள்விகள் எழுந்துள்ளது. நேற்று முதல்வர் விஜய் டெல்லியிலிருந்து சென்னை திரும்பியது முதல் மூட் அவுட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த திட்ட தொடக்க விழா ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
