சென்னை: தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பக்ரீத் திருநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் பள்ளி வாசல்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
சென்னைபிராட்வே டான் போஸ்கோ பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தொழுகைக்கு பிறகு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ உரையாற்றினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சார்பாக அரண்மனைக்காரரன் தெரு பின்னி கார் பார்க்கிங் திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
அதில் மாநில துணைப்பொதுச் செயலாளர் அப்துர் ரஹீம் பேசியதாவது: இஸ்லாமியர்கள் குர்பானி எனும் அடிப்படையில் பிராணிகளை பலியிட்டு ஏழைகளுக்கும் ஒரு பங்கை வழங்க இந்த மார்க்கம் வலியுறுத்துகிறது. ஒன்றிய பாஜ அரசின் மூலமாகவும் பாஜ ஆளும் மாநிலங்களிலும் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு பல்வேறு வழிகளில் துன்பப்படுத்தப்படுகிறார்கள். இஸ்லாமியர்களுக்கெதிராக பேசும் முதல்வர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் எந்த விதமான கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உள்ளாவதாக தெரியவில்லை.
இந்த இக்கட்டான சூழ்நிலையில். இஸ்லாமியர்கள், இஸ்லாம் காட்டித்தந்த பொறுமையை கடைபிடிப்பதோடு தங்களின் சமூகநிலையை மாற்றுவதற்கு தன்னலமில்லாத சேவையாற்ற வேண்டும் என்றார். இது போன்று தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
சென்னை தீவுத்திடல், திருவல்லிக்கேணி பெரிய மசூதி, பெரியமேடு மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து பங்கேற்றனர். ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நல உதவிகளையும் வழங்கினர். தொழுகையை முடித்து கொண்டு வீடு திரும்பிய இஸ்லாமியர்கள் குர்பானி கொடுத்தனர். இவற்றில் 3ல் 2 பங்கை ஏழைகளுக்கு கொடுத்தனர்.
இது மட்டுமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு மதியம் பிரியாணி விருந்து படைத்தனர். பக்ரீத் தொழுகை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து பிரியாணி கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல இடங்டகளில் நீண்ட வரிசையில் நின்று மட்டன், சிக்கன் பிரியாணியை வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது.
