பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ரூ.18.36 கோடி முதலீடு செய்யப்பட்ட 242 வங்கிக் கணக்குகள் முடக்கம்; கோடிக்கணக்கில் முதலீடுகள் கண்டுபிடிப்பு

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 18.36 கோடி இருப்பு உள்ள 242 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கொச்சியில் சிஎம்ஆர்எல் என்ற தாது மணல் ஆலை நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியது. இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அதில் ஒரு ஆவணத்தில் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்தும் எக்சாலாஜிக் என்ற சாப்ட்வேர் நிறுவனத்திற்கு வருடம்தோறும் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வந்தது தெரியவந்தது.  இதற்கிடையே வீணா விஜயன் மீது தீவிர மோசடி விசாரணை அலுவலகமும் (எஸ்எஃப்ஐஓ), அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த இரு அமைப்புகளும் வீணா விஜயன் மற்றும் சிஎம்ஆர்எல் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சிஎம்ஆர்எல் நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், வீணா விஜயன் மற்றும் சிஎம்ஆர்எல் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் மற்றும் கண்ணூரில் உள்ள பினராயி விஜயனின் வீடுகள் உள்பட கேரளம், கர்நாடக மாநிலத்தில் உள்ள 12 இடங்களில் அமலாக்கத் துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் இறங்கினர்.

வீணா விஜயனின் கணவரும், கடந்த பினராயி விஜயனின் அரசில் சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதைய பேப்பூர் தொகுதி எம்எல்ஏவுமான முகம்மது ரியாசின் கோழிக்கோட்டில் உள்ள வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த இடங்களில் சுமார் 8 மணிநேரத்திற்கு மேல் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பினராயி விஜயனின் வீட்டில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

பல்வேறு முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ரூ 18.36 கோடி பணம் முதலீடு செய்யப்பட்ட 242 வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. வங்கிக் கணக்கு விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் இதில் 3 வங்கிக் கணக்குகள் வீணா விஜயனுக்கு சொந்தமானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பினராயி விஜயனின் வீட்டில் இருந்து ஏராளமான டிஜிட்டல் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

வீணா விஜயனின் செல்போனும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றை அமலாக்கத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி வீணா விஜயனுக்கு இன்னும் ஒரு சில தினங்களில் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது. திருவனந்தபுரத்தில் சோதனையின்போது தாக்குதல் நடத்தப்பட்டதால் விசாரணையை பெங்களூருவுக்கு மாற்றுவது குறித்து அமலாக்கத்துறை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

* திட்டமிட்ட தாக்குதல்
திருவனந்தபுரத்தில் பினராயி விஜயனின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் மீது சிபிஎம் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் தொடர்பாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறிய விவரங்கள் வருமாறு: பினராயி விஜயனின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திடீரென நடந்தது அல்ல. அது திட்டமிட்ட தாக்குதல் ஆகும்.

எல்லா சட்டங்களையும் பின்பற்றித் தான் சோதனை நடத்தப்பட்டது. அதிகாரிகளோ, சிஆர்பிஎப் வீரர்களோ எந்த ஆத்திரமூட்டும் செயலிலும் ஈடுபடவில்லை.ஆனாலும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 கார்கள் சேதமடைந்தன. ஒரு கார் டிரைவருக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. சிஎம்ஆர்எல் நிறுவனத்திற்கு எதிரான சோதனை தொடரும். இவ்வாறு அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

* 300 பேர் மீது வழக்கு
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை இந்த சம்பவத்தில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனையை கண்டித்து நேற்றும் திருவனந்தபுரம் உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிபிஎம் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories: