தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் போதை கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை:கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகதான் எங்களின் உயிர் மூச்சு. பதவிக்காக எவரும் செயல்படவில்லை. எங்கும் செல்லவில்லை. தேர்தலுக்கு முன்பும் பின்னரும் சிலர் தேவையற்ற தகவல்களை பரப்பினர். நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கட்சியின் வளர்ச்சிக்காகவும், தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காகவும் சில கோரிக்கைகளை வைத்தோம்.

பொதுச்செயலாளர் அவற்றை ஏற்று, கட்சியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறார். சி.வி.சண்முகமும் நானும் ஒற்றுமையாகவே செயல்பட்டு வருகிறோம். சில ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் தவறான தகவல்களை பரப்புகின்றன. கட்சியை பலப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே எங்களின் நோக்கம். அதிமுக 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. ஒரு தோல்வியால் கட்சி தளராது.

எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இந்த இயக்கத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம். அண்ணன், தம்பிபோல் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். தொண்டர்கள், பொறுப்பாளர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதைத்தான் நாங்கள் செய்வோம். கோவையில் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்து வருகிறது.

இதை தவெக அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். கோவை விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து புக் ஒன்றையும் வழங்கியுள்ளோம். இதனை செய்யவில்லை என்றால் சட்டமன்றத்தில் குரல் கொடுப்போம். கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களுக்கு முக்கியம். அதிமுக ஒற்றுமையாக உள்ளது.

சிலர் வெளியேறுவதால் கட்சி பலவீனமடையாது. தோல்விகளை வெற்றிப் படிக்கட்டாக மாற்றி மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ‘‘தவெகவிற்கு தற்போது ஆதரவா?’’ என்ற கேள்விக்கும், ‘‘மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்குமா?’’ என்ற கேள்விக்கும் எஸ்.பி. ேவலுமணி பதில் அளிக்கவில்லை. விஜயபாஸ்கர் குறித்து கேட்டபோது, ‘‘யூகத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது’’ என அவர் தெரிவித்தார்.

* வேலுமணிக்கு அதிமுகவினர் எதிர்ப்பு
அதிமுகவில் ஏற்பட்ட மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமியின் பெயரை நமது அம்மா நாளிதழில் இருந்து நீக்கியிருந்த வேலுமணி, திடீரென நிறுவனர் பெயரில், நிறுவனர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி என அவரது பெயரையும் சேர்த்துக்கொண்டார். இதனால் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதேநேரத்தில் வேலுமணியின் மாவட்ட செயலாளர் மற்றும் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார்.ஆனால் வேலுமணியின் ஆதரவாளர்கள், நமது அம்மா பத்திரிகையில் வேலுமணியை வரவேற்று கொடுத்துள்ள விளம்பரத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் வேலுமணி என கூறியுள்ளனர். இதனால் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுகவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில் எந்த அறிவிப்பும் வராத நிலையில் வேலுமணி எப்படி கட்சிப்பதவிகளை பயன்படுத்தலாம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியியின் ஆதரவாளர்கள் கூறியதாவது: எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதால் வேறுவழியின்றி மீண்டும் அதிமுகவில் வேலுமணி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். ஆனால் அவரது பதவி பறிக்கப்பட்டதுடன், கோவை தெற்கு மாவட்டத்திற்கு வேலுசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தற்போது அதே பதவியை பெயருக்கு பின்னால் போடுவதால் மீண்டும் கட்சியினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எந்த அறிவிப்பும் வராத நிலையில் பதவி பறிக்கப்பட்டவர்கள் பதவியின் பெயரை போடகூடாது. அதே நேரத்தில் நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பெயரில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் மட்டுமே போடவேண்டும். இல்லை என்றால் அவரது பெயரை எடுத்துவிட்டு, வேலுமணி பெயரை மட்டும் போட்டுக்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: