தேனி: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து ஆய்வு என்ற பெயரில் தவெக நிர்வாகிகள் அரசு அலுவலகங்களுக்குச் சென்று ரீல்ஸ் எடுத்து பதிவிடுகின்றனர். அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட தவெக நிர்வாகி எனக்கூறி அஜிதா தெய்வேந்திரன் என்பவர் கட்சி நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகம் சென்று, கலெக்டருக்கு பூங்கொத்து கொடுப்பது போலவும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்சி மகளிர் நிர்வாகிகளை கலெக்டருக்கு அறிமுகம் செய்து வைப்பது போலவும் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், தவெக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் நேற்று வெளியிட்டுள்ளஅறிக்கையில், ‘‘தமிழக வெற்றிக்கழக தேனி வடக்கு மாவட்டத்தில் இருந்து மாவட்ட மகளிர் அணி என்று யாருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை. மாவட்ட மகளிர் அணியினர் என்றும் நிர்வாகிகள் என்றும் கட்சியின் பெயரை பயன்படுத்தி எந்த அரசு அலுவலகங்களையோ அல்லது தனியார் நிறுவனங்களையோ அணுகக் கூடாது என கட்சியின் சார்பில் எச்சரிக்கப்படுகிறது.
விதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக கட்சியின் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக எம்எல்ஏக்களையே கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவில்லை. அணிகளின் நிர்வாகிகள் யார், யார் என்பது அந்த கட்சி நிர்வாகிகளுக்கு எப்படி தெரியும் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
