நதி நீர் பங்கீட்டு விவகாரங்களை மாநிலங்கள் பேசி தீர்க்கவேண்டும்: மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார். அரசின் ஒருங்கிணைந்த பல்நோக்கு நிர்வாகத் தளமான பிரகதியின் 51வது கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி, ஒன்றிய மற்றும் மாநில அரசின் தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் ரயில்வே, மின்சாரம் மற்றும் சாலைத் துறைகளில் சுமார் ரூ.30ஆயிரம் கோடி மதிப்பிலான ஏழு முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் பேசிய பிரதமர், பொதுத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதமானது செலவு அதிகரிப்பதற்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல் அத்தியாவசிய வசதிகளை உரிய நேரத்தில் பெறுவதில் இருந்தும் பொதுமக்களை அது தடுக்கிறது என்று தெரிவித்தார்.

கென்-பெட்வா நதி இணைப்பு திட்டத்தை ஆய்வு செய்தபோது பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, சரியான நேரத்தில் அனுமதி பெறுதல், தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் திட்டமிட்ட செயலாக்கம் ஆகியவற்றின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான நிதி நீர் பங்கீட்டு பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்றும் மற்ற மாநிலங்களுக்கு இது ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Stories: