திருவனந்தபுரம்: ஆலப்புழா அருகே கழிப்பறை கழிவுகளை அகற்றும் வாகன உரிமையாளரிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்க முயன்ற டிஎஸ்பியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஓட ஓட விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனர். முன்னதாக இவர் தன்னை கைது செய்ய வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை அரிவாளைக் காட்டி மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா டிஎஸ்பியாக இருப்பவர் அனில்குமார். இவர் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் டிஎஸ்பி அனில்குமாரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சேர்த்தலா பகுதியில் கழிப்பறை கழிவுகளை அகற்றும் ஒரு வாகனத்தை டிஎஸ்பி அனில்குமார் பிடித்தார். வாகனத்தை விடுவிக்க தனக்கு ரூ. 2 லட்சம் வேண்டும் என்று அதன் உரிமையாளரிடம் அனில்குமார் கூறியுள்ளார்.
அதற்கு வாகன உரிமையாளரும் சம்மதித்தார். இதுகுறித்து அந்த வாகனத்தின் உரிமையாளர் ஆலப்புழா லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பென்னிக்கு தகவல் தெரிவித்தார். ஏற்கனவே அனில்குமாரை தங்களது கண்காணிப்பில் வைத்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அவரை கைது செய்ய திட்டம் தீட்டியது.லஞ்ச ஒழிப்புத்துறையின் திட்டத்தின்படி பணத்தை கொடுப்பதற்காக வாகன உரிமையாளர், டிஎஸ்பி அனில்குமாரின் வீட்டுக்கு சென்றார்.
அவர் பணத்தை கொடுத்தவுடன் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பென்னி தலைமையிலான போலீசார் டிஎஸ்பி அனில்குமாரை பிடிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட அவர், வீட்டில் இருந்த அரிவாளை காட்டி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை மிரட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து சுவர் ஏறிக்குதித்து தப்பி ஓடினார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் அவரை விடாமல் ஓட ஓட விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து கோட்டயம் விஜிலன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
