சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி: பைஜூஸ் நிறுவனருக்கு 6 மாதம் சிறை தண்டனை

 

 

புதுடெல்லி: பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது. திங்க் அண்ட் லேர்ன் என்ற பெயரில் தொடங்கப்பட்ட பைஜூஸ் நிறுவனம், கொரோனா காலகட்டத்தில் இணைய வழி கல்வி மூலம் இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனமாக உயர்ந்தது. இந்நிறுவனத்தில் ஏராளமான சர்வதேச நிறுவனங்கள் முதலீடு செய்தன. இதனால், குறுகிய காலத்தில் 22 பில்லியன் டாலர் மதிப்பை எட்டியது. ஆனால் வளர்ச்சியை போலவே வேகமான சரிவையும் பைஜூஸ் சந்தித்தது.

இதனால் முதலீடு செய்த பல நிறுவனங்கள் பின்வாங்கியதால் பல சட்ட சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், கத்தார் முதலீட்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சிங்கப்பூர் நீதிமன்றம் பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காததால் நீதிமன்ற அவமதிப்பின் கீழ் இந்த தண்டனையை விதித்துள்ள சிங்கப்பூர் நீதிமன்றம் வழக்கு செலவாக ரூ.60 லட்சத்தை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்தும் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி மனு செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக பைஜூ ரவீந்திரனின் வழக்கறிஞர்கள் கூறி உள்ளனர். இந்த தீர்ப்பு பைஜூ ரவீந்திரனுக்கு இதுவரை இல்லாத மிகக் கடுமையான சட்ட ரீதியான பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: