அகமதாபாத்: குஜராத்தின் முந்த்ரா கடற்கரை பகுதியில் பிரபல தொழில் அதிபர் அதானிக்குசொந்தமான துறைமுகம் உள்ளது. இந்த துறைமுக கடல் பகுதியில் சரக்கு கப்பல் ஒன்றில் போதைப்பொருள் கடத்தப்பட்டுவதாக குஜராத் தீவிராத தடுப்புப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தீவிரவாத தடுப்பு படையினர் மற்றும் இந்திய கடலோரக் காவல்படையினர் இணைந்து கடல்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீவிரவாத தடுப்பு படையினரை ஏற்றிச்சென்ற இடைமறிப்புப் படகுகள் முந்த்ரா துறைமுக பகுதில் கப்பல்கள் நங்கூரமிடும் பகுதியில் விரிவான தேடுதலை மேற்கொண்டன.
அப்போது சுமார் ஐந்து கடல் மைல் தொலைவில் எம்பி யூரோப் என்ற சரக்கு கப்பல் நங்கூரமிட்டு இருந்தது. அந்த கப்பலில் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் தென்பட்டன. இருட்டில் அந்த கப்பலில் இருந்து சில பைகள் கடலுக்குள் வீசப்படுவதை கூட்டுப்படையினர் கவனித்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக விரைந்த கடலில் இருந்து ஐந்து பைகளை மீட்டனர். அந்த பைகளை பரிசோதனை செய்தபோது அதில் சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெள்ளை நிறப் பொடிகள் அடங்கிய சுமார் 115 பொட்டலங்கள் இருந்தன.
பரிசோதனையில் அந்த பொட்டலங்களில் இருந்தது கோகைன் என்பது உறுதி செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மொத்த போதைப்பொருளின் எடை சுமார் 115கிலோ ஆகும். சர்வதேச சந்தையில் இந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.1150கோடியாகும். இதனை தொடர்ந்து மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக சரக்கு கப்பல் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது. கடலோர காவல்படையினர் மற்றும் தீவிரவாத தடுப்பு படையினர் இணைந்து கூட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
