அதிகரித்து வரும் வெப்பநிலை முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்: பிரதமர் மோடி அறிவுரை

 

புதுடெல்லி: நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், மக்கள் அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் நேற்று கூறியிருப்பதாவது: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலையும், அதனுடன் வரும் சவால்களும் காணப்படுகின்றன. எனவே நீங்கள் முடிந்தவரை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற கடுமையான வானிலையின் போது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது முக்கியம். வெளியில் செல்லும் போது மறக்காமல் தண்ணீர் கொண்டு செல்லுங்கள்.

தேவைப்படும் மற்றவர்களுக்கும் ஒரு டம்ளர் தண்ணீர் கொடுங்கள். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளியில் வேலை செய்பவர்கள் கடும் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள். வெப்ப சோர்வின் எச்சரிக்கை அறிகுறிகளை யாரும் புறக்கணிக்க கூடாது. ஏனெனில் அது விரைவாக ஆபத்தானதாக மாறி வெப்ப பக்கவாதத்திற்கு கூட வழிவகுக்கும். தலைசுற்றல், குமட்டல், அதீத சோர்வு போன்ற வெப்ப சோர்வின் அறிகுறிகளை கவனியுங்கள். உங்களை சுற்றியுள்ள ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் பலவீனமாக உணர்ந்தாலோ தலைவலி ஏற்பட்டாலோ உடனடியாக அவர்களை குளிர்ச்சியான, நிழலான இடத்திற்கு அழைத்துச் செல்ல உதவுவது சிறந்தது.

வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர், ஓஆர்எஸ் கொடுத்து உதவுங்கள். வயதான பெற்றோர், தாத்தா பாட்டி மற்றும் அன்புக்குரியவர்களை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரியுங்கள். அவர்களுக்கு போதுமான தண்ணீர் குடிக்கவும், நண்பகல் உச்சி வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்கவும், முடிந்தபோதெல்லாம் ஓய்வெடுக்கவும் நினைவூட்டுங்கள். வீட்டின் பால்கனிகள், மொட்டை மாடியில் சிறிய கிண்ணத்தில் வைக்கப்படும் தண்ணீர், தாகமாக இருக்கும் ஒரு பறவைக்கு உயிர்நாடியாக மாறும் இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.
சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரியைத் தாண்டினால் வெப்ப அலை என அறிவிக்கப்படுகிறது.
47 டிகிரிக்கு அதிகமான வெப்பநிலைகள் கடுமையான வெப்ப அலையாக வகைப்படுத்தப்படுகின்றன.

Related Stories: